20 மயில்கள் உயிரிழப்பு விஷம் வைத்து கொலை?
பெங்களூரு, கர்நாடகாவின் துமகூரில், 20 மயில்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகாவின், மிடிகேஷியின், ஹனுமந்தபுரா கிராமத்தின் சுற்றுப்புறத்தில் மயில்களின் நடமாட்டம் அதிகம். அவ்வப்போது மக்களின் கண்களில் தென்படும். தோகை விரித்து நடனமாடி மகிழ்விக்கும். இந்நிலையில் நேற்று காலை, 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. காலை வயலுக்கு சென்ற விவசாயிகள், மயில்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். ஐந்து ஆண், 15 பெண் மயில்கள் இறந்துள்ளன. மயில்களின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை சாப்பிட்டிருக்கலாம். அல்லது யாராவது உள்நோக்கத்துடன் விஷம் கலந்த தீவனம் கொடுத்து கொன்றிருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மயில்களின் உடல்களை, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். அறிக்கை வந்த பின்னரே, மயில்களின் இறப்புக்கு காரணம் தெரியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.