உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாசகர்களை அசர வைக்கும் புத்தக திருவிழா; 10 நாள் பரவசம் பெங்களூரில் இன்று துவக்கம்

 வாசகர்களை அசர வைக்கும் புத்தக திருவிழா; 10 நாள் பரவசம் பெங்களூரில் இன்று துவக்கம்

பெங்களூரு: அறிவுப்பசியில் இருக்கும் புத்தக வாசிப்பாளர்களை நேசிக்க காத்து கொண்டிருக்கும், நான்காவது தமிழ் புத்தக திருவிழா இன்று பெங்களூரில் துவங்குகிறது. மனிதனுக்கு வாழ்க்கையில் சுவாசிப்பது எவ்வளவு முக்கியமோ, வாசிப்பதும் அவ்வளவு முக்கியமே. புத்தகங்களை வெறுமென படிப்பதை கடந்து, அவற்றை நேசிக்க வேண்டும். அப்போது தான், அந்த வாசிப்பு உலகத்தில் நம்மால் நீண்ட காலம் பயணிக்க முடியும். தாய் மொழியில் புத்தகங்களை வாசிக்கும் போது சிந்தனை திறன், அறிவுத்திறன் நிச்சயம் மேம்படும். தமிழர்களாகிய நாம், வேறு மாநிலத்தில் வாழ்வதால் எளிதில் தமிழ் புத்தகங்களை வாங்க முடியாது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் புத்தக திருவிழாவை நடத்துகிறது. இந்த தமிழ் புத்தக திருவிழா 2022 முதல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. நடப்பாண்டு, நான்காவது தமிழ் புத்தக திருவிழா இன்று துவங்குகிறது. பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள, 'தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்'சில் நடக்கிறது. விழாவை, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில், 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் துவக்கி வைக்கிறார். தமிழ் சொந்தங்கள் மொத்தம் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், 'காதல், ஆன்மிகம், பொருளாதாரம், கிரைம், குழந்தை நாவல், தமிழ் இலக்கியம், இலக்கணம்' என பல வகையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய, நீங்கள் நீண்ட நாள் தேடக்கூடிய தமிழ் புத்தகங்களை வாங்குவதற்கு அருமையான வாய்ப்பு. இந்த திருவிழாவில் தமிழ் புத்தகங்களுடன், நிறைய தமிழ் சொந்தங்களையும் பார்க்க முடியும் என்பது மற்றொரு சிறப்பு. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ் சார்ந்த விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, விஞ்ஞானிகளுடன் நேரடி உரையாடல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., திரைப்பட கலைஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் போன்றோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, மாய வித்தை காட்சி, பாவரங்கம், சிந்தனை களம், தமிழர் மரபு விளையாட்டுகள், பாரம்பரிய உணவுகள், கூத்தரங்கம், நுாலரங்கம், நாடகம், தமிழ் அறிஞர்களுக்கு விருது, சிறந்த தமிழ் நுால்களுக்கு பரிசு என சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த தலைமுறை இதில், சொல்லாத பல விஷயங்கள் கூட இடம்பெறலாம். அதுதான் தமிழ் புத்தக திருவிழாவின் சிறப்பே. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு, 'பரிசு கூப்பன்' வழங்கப்படும். 35 ஸ்டால்களில், மூன்று ஸ்டால்களில் கன்னட நுால்கள் இடம் பெறுகின்றன. இதுவே, இந்த ஆண்டின் தனிச்சிறப்பு. பிற மாநிலத்தில் வாழ்ந்தாலும், அந்த மண்ணின் மொழிக்கும் மரியாதை தருவதே தமிழனின் தனி சிறப்பு. இந்த அனுபவத்தை பெற, நீங்கள் எந்த கட்டணமும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இனி எதற்கும் காலம் தாழ்த்த வேண்டாம். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் புத்தக திருவிழாவுக்கு வாருங்கள். அடுத்த தலைமுறைக்கு தமிழை வாசிக்கவும், நேசிக்கவும் கற்று கொடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை