ஆன்மிக பணியை விட்டு அரசியல் பேசும் மடாதிபதிகள்
கர்நாடகாவில் கோவில்களுக்கு அடுத்தபடியாக, பக்தர்கள் அதிகம் செல்வது மடங்களுக்கு தான். மடாதிபதிகளை சந்தித்து அவர்களின் ஆசி பெறுவதை பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். துமகூரு சித்தகங்கா, சுத்துார் ஆதிசுஞ்சனகிரி, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணா உட்பட கர்நாடகாவில் ஏராளமான மடங்கள் உள்ளன. இவற்றில் சமூகம் சார்ந்த மடங்களும் உள்ளன.பெரும்பாலான மடங்கள் ஏழை, எளிய மக்களுக்கு அதிக சேவை செய்கின்றன. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோரை பராமரிப்பது, உணவு தானம் உட்பட பல சேவைகளை செய்து வருகின்றன. ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் மடங்கள் ஆதரிக்கின்றன.சமூக, கலாசாரப் பணிகளில் மடாதிபதிகள் ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சியினர் யார் சென்றாலும், மடாதிபதிகள் ஆசி வழங்குவர். இயக்குவது
தேர்தல் வேளைகளில் தங்கள் சமூகத்தை ஆதரிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்த மடங்களும் முடிவு செய்கின்றன. மடாதிபதிகள் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு அளித்து தர்மத்தை மீறியது இல்லை.ஆன்மிக பணியை மட்டும் பெரும்பாலான மடாதிபதிகள் செய்து வரும் நிலையில், சமீப காலமாக ஒரு சில மடாதிபதிகள் அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர்.தைலேஸ்வரா மடத்தின் புனரமைப்பு பணிக்கு, நிதி ஒதுக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி 25 சதவீத கமிஷன் கேட்பதாக, மடாதிபதி பூர்ணானந்தபுரி சுவாமி, சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். “நானே அரசியலில் இருந்து தான் ஆன்மிகத்திற்கு வந்துள்ளேன். எனக்கும் எல்லாம் தெரியும்,” என்றார் பூர்ணானந்தபுரி சுவாமி.இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஆளும் காங்கிரசார், மடாதிபதியை, பா.ஜ.,வினர் பின்னாள் இருந்து இயக்குவதாக குற்றஞ்சாட்டினர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வர் பதவி
மடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, ஆளுங்கட்சியினருக்கு அழைப்பு விடுக்காமல், பா.ஜ.,வினரை மட்டும் அழைப்பதாகவும் குற்றச்சாட்டு கூறினர். “மடாதிபதி அரசியல் செய்கிறார். காவியை கழற்றிவிட்டு வந்து அரசியல் செய்யட்டும்,” என, அமைச்சர் சிவராஜ் தங்கடகியும் கூறினார்.இந்த பிரச்னை ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், “துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும்,” என, பாலேஹொன்னுார் ரம்பாபுரி மடத்தின் மடாதிபதி ரம்பாபுரி சுவாமிகள் கூறினர்.குருபா சமூக மடாதிபதிகளோ, “சித்தராமையாவே முதல்வராக தொடர வேண்டும்,” என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.லிங்காயத் சமூகத்தின் ஸ்ரீசைல மடத்தின் மடாதிபதி சன்னசித்தராம பண்டிதராதிய சிவாச்சாரியார், “லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் பதவி வேண்டும்,” என்றார்.இன்னும் சில மடாதிபதிகள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக பேசி, 'அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கின்றனர்.இப்படி மடாதிபதிகள் ஆளாளுக்கு, அரசியல்வாதிகளின் மனம் குளிர்விக்கும் வகையில், அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். மடாதிபதிகள் கருத்துகள் மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆனால் அந்த கருத்துகள் அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன.தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவாக மடாதிபதிகள் பேசுவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மிகப் பணிக்கு திரும்பி விட்டு, அரசியல் பேசுவதை மக்கள் அருவெறுப்புடனே பார்க்கின்றனர். இதை மடாதிபதிகள் உணர்ந்து, ஆன்மிகப் பணியை மட்டும் செவ்வனே செய்வது, சமுதாயத்துக்கு நல்லது. - நமது நிருபர் -