உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வினய் குல்கர்னியிடம் ரூ.24 கோடி கடன் வாங்கிய ஐஸ்வர்யா கவுடா

வினய் குல்கர்னியிடம் ரூ.24 கோடி கடன் வாங்கிய ஐஸ்வர்யா கவுடா

பெங்களூரு: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியிடம் 24 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது.அவர்கள் இருவரும் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் நகை வாங்கி மோசடி செய்த, ஐஸ்வர்யா கவுடா, 33, என்பவரை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்கின்றனர். ஐஸ்வர்யாவுடன், தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிந்தது. அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது.ஆனால் இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, வினய் குல்கர்னி கூறி இருந்தார்.

அசல், வட்டி

இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணையில், சில தகவல்கள் தெரியவந்து உள்ளது. ஐஸ்வர்யாவுக்கும், வினய் குல்கர்னிக்கும் இடையில் பணபரிவர்த்தனை நடந்து உள்ளது.வினய் குல்கர்னியிடம் இருந்து ஐஸ்வர்யா 24 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு தினசரி வட்டியாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்துவதாகவும் கூறி இருக்கிறார். ஆனால் வட்டி, அசல் இரண்டும் அவர் கட்டவில்லை.தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், ஜாமினில் வெளியே இருக்கும் வினய் குல்கர்னி, தனக்கு எதிரான சாட்சியங்களை அழிக்க ஐஸ்வர்யாவின் உதவியை நாடி உள்ளார். கொலை வழக்கின் சாட்சியங்களான ஒரு பெண், லட்சுமணன், பசவராஜ் ஆகியோரை மொபைல் போனில் ஐஸ்வர்யா அழைத்து பேசி உள்ளார். வினய் குல்கர்னிக்கு எதிராக சாட்சி சொல்லாமல் இருக்க, கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

வீடியோ கால்

மேலும் ஆர்.ஆர்.நகர் காங்கிரஸ் தலைவர் திப்பேகவுடாவுடன், ஐஸ்வர்யா 60 கோடிக்கு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரிந்து உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் ஐஸ்வர்யா கவுடா - வினய் குல்கர்னி எடுத்து கொண்ட தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருவரும் வீடியோ காலில் பேசும், 'ஸ்கீரின் ஷாட்' புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.ஐஸ்வர்யாவிடம், அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையின் போது, மோசடி, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ