பிக்பாஸ் பிரபலங்களுக்கு 3 நாள் போலீஸ் காவல்
பெங்களூரு: கத்தியை வைத்து 'ரீல்ஸ்' எடுத்த வழக்கில் கைதான, பிக்பாஸ் பிரபலங்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன் ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன். சாலையில் கத்தியுடன் நடந்து செல்வது போன்று 'ரீல்ஸ்' எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.இதுதொடர்பாக 24ம் தேதி இருவரிடமும் பசவேஸ்வராநகர் போலீசார் விசாரணை நடத்தினர். ரீல்ஸ் எடுக்க பயன்படுத்தியதாக கூறி, ஒரு பைபர் கத்தியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொழுதுபோக்கிற்காக வீடியோ எடுத்ததாக கூறியதால், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கொடுத்த கத்தியும், வீடியோவில் இருந்த கத்தியும் வேறு மாதிரி இருந்தது. இதனால் நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ரீல்ஸ் எடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பாதல் இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவே இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.நேற்று மதியம் பெங்களூரு 24வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மலா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.