உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சித்தராமையாவுடன் பா.ஜ., தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பு

 சித்தராமையாவுடன் பா.ஜ., தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, பா.ஜ., தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனது முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தார். சிவகுமார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 17 பேருக்கு, அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்தார். முதல்வராக இல்லாவிட்டாலும் அரசு இல்லமான கிருஷ்ணாவில் தான் இன்னும் வசிக்கிறார். இந்த இல்லத்தில் தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை தினமும் சந்திக்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சித்தராமையா அறிவித்தார். ஆனால் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று கூறியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். கடும் அதிருப்தி இந்நிலையில், சிவகுமார் அமைச்சரவையின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தின் போது, தனது ஆதரவு எம்.எல்.ஏ., பசவராஜ் சிவண்ணவருக்கு, அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க சித்தராமையா முயன்றார். மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியலிலும், சிவண்ணவர் பெயர் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பெயர் கைவிடப்பட்டதால், மேலிடம் மீது சித்தராமையா கடும் அதிருப்தி அடைந்தார். அதிருப்தியில் இருக்கும் அவரை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் முயன்று வருகிறது. எதிரும், புதிரும் இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் பா.ஜ., தலைவர்கள் மூன்று பேர், சித்தராமையாவை அடுத்தடுத்து சந்தித்து பேசியுள்ளனர். கடந்த 26ம் தேதி, கிருஷ்ணா இல்லத்தில் சித்தராமையாவை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி திடீரென சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்; அரசியல் பேசவில்லை என்று ரவி கூறினார். நேற்று முன்தினம், கோகாக் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி; முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு கவுடா நாயக்கும் திடீரென சந்தித்தனர். இவர்களும், சித்தராமையாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினர். ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் உள்ளது என்று, காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி முன்னர், காங்கிரசில் இருந்தவர். சிவகுமாருடன் ஏற்பட்ட மோதலால் பா.ஜ.,வுக்கு சென்று அமைச்சர் ஆனார். பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால், அமைச்சர் பதவியை இழந்தார். இதன் பின்னணியில் சிவகுமார் இருப்பதாக பகிரங்கமாக கூறினர். அரசியலில் இருவரும் எதிரும், புதிருமாக உள்ளனர். உடனடி நடவடிக்கை சிவகுமாரை எதிரியாக பார்த்தாலும், சித்தராமையாவை தனது அரசியல் தலைவராக ரமேஷ் பார்க்கிறார். இதனால், சித்தராமையாவை சந்தித்து, நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ரமேஷின் தம்பி சதீஷ் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். அவரும் ஒரு காலத்தில் சித்தராமையா ஆதரவாளராக இருந்தார். தற்போது இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சித்தராமையாவை, ரமேஷ் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்