கிணற்றில் தள்ளி ஆழம் பார்க்கும் பா.ஜ., அமைச்சர் பிரியங்க் கார்கே பாய்ச்சல்
பெங்களூரு: ''தங்களின் பிள்ளைகளுக்கு, காவி சால்வை அணிவித்து பசுக்களை பாதுகாக்கவும், மதத்தை பாதுகாக்கவும் பா.ஜ., தலைவர்கள் அனுப்புவரா?,'' என, கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தலையை வெட்டுங்கள் என, மற்றவர்களின் பிள்ளைகளை துாண்டும் பா.ஜ., தலைவர்கள், தங்களின் பிள்ளைகளின் கையில் உருட்டுக்கட்டை, அரிவாள் கொடுத்து வீதியில் விடுவார்களா? ஏழைகளின் வீட்டு பிள்ளைகளை, அரசியல் கிணற்றில் தள்ளி ஆழம் பார்ப்பதற்கு பதிலாக, தங்களின் பிள்ளைகளின் தோளில் காவி சால்வை அணிவித்து, கையில் அரிவாள், உருட்டுக்கட்டை கொடுத்து, மதத்தை பாதுகாக்கும் கைங்கர்யத்துக்கு அனுப்பட்டும். பா.ஜ., தலைவர்கள் மதம் பாதுகாப்பு போதனையை, தங்களின் வீட்டில் இருந்தே துவக்கட்டும். தங்கள் பிள்ளைகளுக்கு திரிசூல தீட்சை கொடுக்கட்டும். ஹிந்துக்கள் அதிகமான பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., கட்டளையை, பா.ஜ.,வின் எத்தனை தலைவர்கள் பின்பற்றினர். குழந்தைகளை பெறும் சுமையையும், ஏழைகளே சுமக்க வேண்டுமா; பா.ஜ., தலைவர்களுக்கு பொருந்தாதா? பா.ஜ., தலைவர்களிடம், ஹிந்து தொண்டர்கள், 'தலையை வெட்டும் செயலுக்கு, உங்கள் பிள்ளைகள் முன்னால் நிற்கட்டும். நாங்கள் அவர்களின் பின்னே நிற்கிறோம்' என, ஒரே ஒரு கோரிக்கையை வைக்கட்டும். அப்போது தெரியும்; அக்கட்சியினரின் வண்டவாளம். இவ்வாறு அவர் கூறினார்.