உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தவிர்க்க முடியாதது! மாநில தலைவர்களுக்கு அமித் ஷா கறார் உத்தரவு

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தவிர்க்க முடியாதது! மாநில தலைவர்களுக்கு அமித் ஷா கறார் உத்தரவு

பெங்களூரு: 'கர்நாடகாவில் காங்கிரசை தோற்கடிக்க, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அவசியம், தவிர்க்க முடியாதது.'அவர்களுடன் ஒத்துப்போக வேண்டும்' என, மாநில பா.ஜ., தலைவர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.'கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. இதை பயன்படுத்தி, நாம் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறலாம். 'ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம்' என, கர்நாடகாவுக்கு வந்திருந்த, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வாலிடம், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.அதற்கு அகர்வால், 'அவ்வாறு செயல்படக்கூடாது' என்று எச்சரித்தார். இதையறிந்த கட்சி மேலிடத்தலைவர்கள் கோபம் அடைந்தனர்.

வருகை

இவ்வேளையில், கர்நாடகாவுக்கு இரண்டு நாள் பயணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார். நேற்று ஆதிசுஞ்சனகிரி மடத்தின் பல்கலைக்கழகத்தை துவக்கி வைத்தார்.மாலையில் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூப்பா, எம்.பி., பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட மூத்த தலைவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக, சிலர் ஆட்பேசனை தெரிவித்ததற்கு, அமித் ஷா அதிருப்தி தெரிவித்தார்.'வரும் தேர்தல்களில், ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெறலாம்' என சில தலைவர்கள் கூறினர்.

மறுப்பு

அதற்கு அமித் ஷா, ''இத்தகைய நடைமுறை சரிப்பட்டு வராது. ஓட்டு வங்கி வைத்துள்ள காங்கிரசை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தவிர்க்க முடியாதது. கடந்தாண்டு, நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளே சாட்சி. இவ்வாறு இருக்கும் போது, தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியல்ல.''அடுத்த சட்டசபை தேர்தலில் இரு கட்சியும் கூட்டணி அமைத்தால், 140 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று கட்சி மேலிடம் கூறி உள்ளது.''எனவே, உள்ளூர் ம.ஜ.த., தலைவர்களுடன் பா.ஜ.,வினர் நட்புணர்வுடன் இருக்க வேண்டும். மாநில அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் ம.ஜ.த.,வினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்று அறிவுறுத்தினார்.இதை உறுதிபடுத்தும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும், ''ம.ஜ.த.,வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.''விரைவில் இரு கட்சி தலைவர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ