பார்வையற்ற பயணியருக்கு உதவும் பி.எம்.டி.சி.,யின் ரிமோட் டிவைஸ்
பெங்களூரு : தினமும் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிக்கும் பார்வையற்றோர் வசதிக்காக, பி.எம்.டி.சி., 'ரிமோட் டிவைஸ்' சாதன வசதியை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:பி.எம்.டி.சி., பஸ்களில் 6,800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 40 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நுாற்றுக்கணக்கான பார்வையற்ற பயணியரும் உள்ளனர்.இவர்கள் பயணிக்க வேண்டிய பஸ் எங்குள்ளது, அந்த பஸ் தாங்கள் உள்ள பகுதிக்கு எப்போது வரும் என்பதை, தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். இதற்காக மற்றவரின் உதவியை நாட வேண்டி இருந்தது.இவர்களின் வசதிக்காக புதிய டிவைஸ் சாதனத்தை, பி.எம்.டி.சி., கொண்டு வந்துள்ளது. பார்வையற்றவர்களுக்காகவே, டில்லி ஐ.ஐ.டி., சிறப்பாக ரிமோட் டிவைஸ் சாதனத்தை வடிவமைத்துள்ளது.'பிரைலி' எனும் பார்வையற்றோர் புரிந்து கொள்வதற்கான எழுத்துகள் போன்று ரிமோட் டிவைசும் பெரிதும் உதவும்.பார்வையற்ற பயணியருக்கு, பி.எம்.டி.சி., சார்பில், சிறிய ரிமோட் வழங்கப்படும். இதை அவர்கள் பயன்படுத்தலாம். இவர்கள் பஸ் நிறுத்தத்தில் நின்று, டிவைஸ் பட்டனை அழுத்தினால் பஸ் எந்த பாதையில் நிற்கிறது; எப்போது வரும் என்பது குரல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.அதேபோன்று, இவர்கள் பட்டனை அழுத்தும் போது, சம்பந்தப்பட்ட பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநருக்கும் டிவைஸ் கம்யூனிகேஷன் மூலம், தகவல் செல்லும். அவர் அந்த பாதையில் காத்திருக்கும் பார்வையற்ற பயணியை ஏற்றி கொள்வார்.முதல் கட்டமாக, பி.எம்.டி.சி.,யின் 25 பஸ்களில் கம்யூனிகேஷன் டிவைஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. எலஹங்கா - கெங்கேரி, யஷ்வந்த்புரம் - கெங்கேரி வழித்தடங்களில் பயணிக்கும் பஸ்களில் இந்த வசதி உள்ளது.யஷ்வந்த்பூரில் இருந்து கெங்கேரிக்கு செல்லும் வழித்தடத்தில், பார்வையற்றோர் அதிக எண்ணிக்கையில் பயணிப்பது, பி.எம்.டி.சி.,க்கு தெரிய வந்துள்ளது.எனவே இப்பாதையில் செல்லும் பஸ்களில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நடப்பாண்டு நவம்பருக்குள், அனைத்து பஸ்களிலும் கம்யூனிகேஷன் டிவைஸ் பொருத்த முடிவு செய்துள்ளோம். எங்களின் திட்டத்தில், அரசு சாரா தொண்டு அமைப்புகளும் கைகோர்த்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.