புதைக்கப்பட்ட சிறுமி உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
முல்பாகல்: துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முல்பாகல், மல்லப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 17. கடந்த 12ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது உடல், 13ம் தேதி, அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொண்டவரை, பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்தது, போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் புதைக்கப்பட்ட உடலை நேற்று தோண்டி எடுத்து, முல்பாகல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் உடல், அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடலை அவர்கள் மீண்டும் அடக்கம் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.