மேலும் செய்திகள்
வெண் பன்றிகள் திருட்டு; கோவையில் இருவர் கைது
21-Aug-2025
சிக்கபல்லாபூர்: பன்றி காய்ச்சலால் இறந்த 50க்கும் மேற்பட்ட பன்றிகளை, ஏரியில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ணை உரிமையாளர் மீது வழக்குப் பதிவாகிஉள்ளது. சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின் ஹெப்பரி கிராமத்தில் பண்ணை ஒன்றில் பன்றிகளுக்கு, ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவியது. இப்பண்ணையில் ஒரே வாரத்தில், 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. இதற்கிடையே பண்ணை உரிமையாளர் வெங்கடரெட்டி, நோயால் இறந்த 50க்கும் மேற்பட்ட பன்றிகளின் உடல்களை எரிப்பதற்கு பதிலாக, கிராமத்தின் ஏரியில் வீசியுள்ளார். இதனால் பீதியடைந்த கிராமத்தினர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை அங்கு வந்த அதிகாரிகள், ஏரியை பார்வையிட்டனர். பண்ணை உரிமையாளர் வெங்கடரெட்டி மீது போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் பயன்படுத்தும், ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் ஏரியில், நோயால் இறந்த பன்றிகளை வீசியதால், தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்திய அதிகாரிகள், ஏரியை சுத்தப்படுத்தும் பணிகளை துவக்கினர். இதுகுறித்து கால்நடைத்துறை துணை இயக்குநர் ரங்கப்பா கூறியதாவது: பன்றி காய்ச்சல், மனிதர்களுக்கு பரவாது. யாரும் பயப்பட தேவையில்லை. முன்னெச்சரிக்கையாக ஏரியில் வீசப்பட்ட இறந்த பன்றிகளை வெளியே எடுத்து, பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன. ஏரி நீரை சுத்திகரிக்க தாலுகா, மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஏரியில் பன்றிகளை வீசிய உரிமையாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
21-Aug-2025