30 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2032க்குள் செயல்படுத்த முதல்வர் திட்டம்
பெங்களூரு: வரும் 2032ம் ஆண்டிற்குள் கர்நாடகாவில் 30 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக, பெங்களூரு திறன் உச்சி மாநாட்டில் முதல்வர் சித்தராமையா கூறினார். பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள தி லலித் அசோக் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடக்கும், பெங்களூரு திறன் உச்சி மாநாடு - 2025 நேற்று துவங்கியது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மொரீஷியஸ் நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது ரேசா காசம் உதீம், கர்நாடக திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே. சிறிய தொழில் அமைச்சர் சரணபசப்பா தர்ஷனாபுரா, திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சிவகாந்தம்மா நாயக் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், வெளிநாடுகளின் தொழில் முனைவோரும் கலந்து கொண்டனர். கர்நாடக திறன் மேம்பாட்டு கொள்கை 2025 - 2032, கர்நாடக தொழிலாளர் புளூபிரின்ட் - 2030 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இம்மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கர்நாடகா இன்று தனித்துவமான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. மகாத்மா காந்தி கூறியது போல, நாம் நிகழ்காலத்தில் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்து எதிர்காலம் அமைகிறது. புதுமைகளை உருவாக்கவும், வழிநடத்தவும், மக்களின் திறன்களை மேம்படுத்தவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது. கர்நாடகாவின் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.20 கோடி இளைஞர்கள் வேலைக்கு நுழைவர். இவர்களை சரியான நம்பிக்கையுடன் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. 33 சதவீதம் வரும் 2032ம் ஆண்டிற்குள், 30 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பது, ஐ.டி.ஐ.,க்களில் மகளிர் சேர்க்கை 33 சதவீதமாக உயர்த்துவது, சர்வதேச இடம்பெயர்வு மையம் மூலம் உலகளாவிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது அரசின் இலக்கு, நோக்கம் ஆகும். பல்லாரி சண்டூரில் புதிதாக திறன் மேம்பாடு பல்கலைக்கழகம் நிறுவப்படும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கர்நாடக திறன் மேம்பாட்டு கொள்கை 2025 - 2032 இன்றைய மாநாட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த 7 ஆண்டு மூலோபாய திட்டங்களுக்கு 4,432 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பெங்களூரு திறன் உச்சி மாநாடு, கர்நாடகா திறன் பயணத்தின் ஒரு மைக்கல். விண்வெளி, பசுமை ஆற்றல், சர்வதேச வேலைவாய்ப்புக்கு தயாராக இருக்க இளைஞர்களை தயார் செய்வது எங்கள் நோக்கம். 2032ம் ஆண்டிற்குள் கர்நாடகாவை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். திறன் மேம்பாட்டில் கர்நாடகா எப்போதும் முன்னணி மாநிலமாக உள்ளது. தொழில்துறை புரட்சியில் 4வது இடத்தில் உள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுதும் 34 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டன. இதல் 1.43 லட்சம் பேர் பங்கேற்றனர். 27,123 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பேசினார். மனித வள இடம் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: பெங்களூரு வழியாக தான் இந்தியாவை உலகம் பார்க்கிறது. கர்நாடகாவில் உள்ள கல்லுாரிகளில் இருந்து ஆண்டிற்கு 1.60 லட்சம் இன்ஜினியர்கள் வெளியே வருகின்றனர். நம் மாநிலத்தில் 270க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள், 1,160 ஐ.டி.ஐ., கல்லுாரிகள் உள்ளன. சுகாதாரம், சுற்றுலா உட்பட அனைத்து துறைகளிலும் நாம் முன்னணியில் உள்ளோம். காலநிலையும் சிறப்பாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 13 லட்சம் ஐ.டி., ஊழியர்கள் உள்ளனர். பெங்களூரில் 25 லட்சம் பேர் உள்ளனர். அறிவு, அறிவியல், கண்டுபிடிப்பு, ஏராளமான மனித வளங்களை கொண்ட இடமாக பெங்களூரு உள்ளது. இம்மாநாட்டின் மூலம் புதுமையான யோசனை வெளிவரும் என நம்புகிறேன். பரிமாற்றம் மூலம் முன்னேற்றம் வரும். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கர்நாடகாவை கட்டியெழுப்புவது, நிலையான எதிர்காலத்துக்கான திறன் மேம்பாடு தொடர்பான விவாதங்களை பார்க்க ஆர்வமாக உள்ளோம். அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் தொழிலில் டாக்டர். ஆனாலும் அவர் திறன் மேம்பாட்டு துறைக்கு பொறுப்பு ஏற்று, துறைக்கு புதிய வடிவம் கொடுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். பட விளக்கம் JPM_05 11 2025 (6) _ JPM_05 11 2025 (7) கர்நாடக திறன் மேம்பாட்டு கொள்கை 2025 - 2032 புத்தகத்தை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், மொரீஷியஸ் தொழிலாளர் நல அமைச்சர் முகமது ரேசா காசம் உதீம், திறன் மேம்பாட்டு கழக தலைவர் சிவகாந்தம்மா நாயக் உள்ளிட்டோர் வெளியிட்டனர். (அடுத்த படம்) மாநாட்டில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினர்.