கோவிலுக்குள் நிகிலை நுழைய விடாமல் நடையை அடைத்த காங்., கட்சியினர்
ராம்நகர்: கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்துக்கு வந்த ம.ஜ.த., தலைவர் நிகில் குமாரசாமியை, உள்ளே விடாமல் கதவு அடைக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு தெற்கு மாவட்டம் ஹரோஹள்ளி தாலுகா, தொட்டகுருபரஹள்ளி கிராமத்தில் பிசிலு மாரம்மா கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரும் விழாவில் பங்கேற்க, நேற்று முன்தினம் சென்றார். இவர் வருவதை அறிந்த காங்கிரசார், கோவில் கதவை பூட்டினர். கதவை திறக்கும்படி ம.ஜ.த., தொண்டர்களும், கிராமத்தினரும் வற்புறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்திருந்த நிகில் குமாரசாமி, சுவாமியை தரிசிக்காமல் வீடு திரும்பினார். இதனால் கோபம் அடைந்த ம.ஜ.த.,வினர், காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் விழாவின் போது, காங்கிரசாரின் இச்செயலை கிராமத்தினர் கண்டித்துள்ளனர். மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது: நேற்று நடந்த சம்பவத்தை பார்க்கும்போது, காங்கிரஸ் தொண்டர்களின் நடத்தை சரியில்லை. இத்தகைய சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. நான் எம்.எல்.ஏ.,வாக இல்லாத போது, ஹோசூர் என்ற கிராமத்தில், காங்கிரசார் என்னை இதுபோன்று ஒடுக்கி, கோவிலை பூட்டினர். ஆனால், பொது தேர்தலில், எனக்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெரும்பான்மை கொடுத்து வெற்றி பெற வைத்தனர். இந்த சம்பவம் மாற்றத்தை கொண்டு வர வழிவகுத்ததுடன், இன்னும் என் நினைவில் உள்ளது. இப்போது நிகிலுக்கும் அதே நிலை ஏற்பட்டு உள்ளது. இச்சம்பவம் மாற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.