உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்

 சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்

பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின் கிடைத்து உள்ளது. சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. கோவாவில் சூதாட்ட விடுதிகள் நடத்துகிறார். ஆன்லைன், ஆப்லைன் சூதாட்ட நிறுவனங்களை நடத்தி, அதில் கிடைத்த பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சிக்கிம் மாநிலம் காங்டாங்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 100 கோடி ரூபாய்க்கு மேல் தங்க நகைகள், பணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அக்டோபர் 18ம் தேதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வீரேந்திர பப்பி மனு செய்தார். நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் மனுவை விசாரித்தார். எம்.எல்.ஏ., சார்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவளி தனது வாதத்தின் போது, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு, தனது மனுதாரருக்கு ஜாமின் கேட்டார். அமலாக்கத்துறை வக்கீல்கள் ரஜத், சஷ்வத், மனுதாரருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வீரேந்திர பப்பிக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் உத்தரவிட்டார். ஐந்து லட்சம் ரூபாய்க்கு பிணைய பத்திரம் வழங்க வேண்டும்; பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை