உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை

பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை

மங்களூரு: தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து, மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெலகாவி நகரின், சுஞ்சநுார் கிராமத்தில் வசித்த 14 வயது சிறுமி, உறைவிடப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில், விடுமுறையில் சிறுமி வீட்டுக்கு வந்திருந்தார். அவரது தாய், தட்சிணகன்னடா, மங்களூரின், சுரத்கல் அருகில், ஜோகட்டே கிராமத்தில் உள்ள, சிறுமியின் சித்தப்பா வீட்டில் விட்டிருந்தார். விடுமுறை முடிந்த பின், மகளை மீண்டும் உறைவிடப் பள்ளியில் விடும்படி கூறியிருந்தார். ஆகஸ்ட் 6ம் தேதி, சிறுமியின் சித்தப்பா, கூலி வேலைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி ஊருக்கு சென்றிருந்ததால், வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் பக்கீரப்பா ஹனமப்பா மாதரா, 58, சிறுமி தனியாக இருப்பதை கவனித்து, அத்துமீறி வீட்டுக்குள் புகுந்தார். சிறுமியை தாக்கி பலாத்காரம் செய்தார். துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து, பனம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பக்கீரப்பாவை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையை முடித்து, மங்களூரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் மற்றும் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் பக்கீரப்பாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கே.எஸ்.மானு, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். அபராத தொகை ஒரு லட்சம் ரூபாயுடன், நான்கு லட்சம் ரூபாய் சேர்த்து, சிறுமியின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட சட்டசேவைகள் ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார். தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கேட்ட பக்கீரப்பாவின் முகத்தில் சிறிதளவு வருத்தமும் தென்படவில்லை. தான் செய்த தவறுக்கு பச்சாதாபமும் படவில்லை. கொலையான சிறுமிக்கு, ஒரே ஆண்டில் நியாயம் கிடைத்துள்ளது. இதற்கு நேரில் கண்ட சாட்சிகள் உதவியாக இருந்தன. சிறுமியின் தாய் அவ்வப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் மொபைல் போன் மூலம், மகளுடன் பேசுவது வழக்கம். சம்பவம் நடந்த நாளன்று, அந்த பெண்ணுக்கு போன் செய்த தாய், மகளிடம் பேச போனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். போன் கொடுக்க வந்த பெண்ணும், மற்றொரு பெண்ணும் சிறுமி வீட்டுக்கு வந்தபோது, பக்கீரப்பா அந்த சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்வதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மிரட்டிய பக்கீரப்பா, தன் வீட்டுக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு தப்பினார். அந்த இரண்டு பெண்களும், நீதிமன்றத்தில் சாட்சியம் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை