வீடுகளுக்கு நேரடி மாம்பழ விற்பனை தபால் துறைக்கு ரூ.83 லட்சம் வருவாய்
பெங்களூரு : மாம்பழங்களை விற்பனை செய்ததன் மூலம், தபால்துறைக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 83 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மாம்பழங்களை மக்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்வது குறித்து, நேற்று பெங்களூரு தலைமை தபால் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.கர்நாடகா முதன்மை ஜெனரல் போஸ்ட் மாஸ்டர் ராஜேந்திர குமார், கர்நாடக மாம்பழ மேம்பாட்டு மற்றும் மார்க்கெட் காப்பரேஷன் இயக்குனர் நாகர்ஜூ, பெங்களூரு தலைமை தபால் நிலைய அதிகாரி மஞ்ஜேஷா உட்பட பலர் பங்கேற்றனர்.தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை வாங்கி, நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் கடந்த 7ம் தேதி துவங்கப்பட்டது. இத்திட்டம் 2019 முதல் கர்நாடகாவில் செயல்படுத்தப்படுகிறது.மாம்பழங்களை வாடிக்கையாளர்கள் www.karsirimangoes.gov.inஎன்ற இணையத்தளத்தின் மூலம் வாங்கலாம். மல்கோவா, அல்போன்சா, தோத்தாபுரி, மல்லிகா, செந்துாரா உட்பட பல ரகங்களை வாங்கலாம். ஒரு பாக்சில் 3 கிலோ வரை மாம்பழம் இருக்கும். பழத்தின் விலையுடன் பார்சலுக்கு 82 ரூபாய் தனியாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுமட்டுமின்றி கடந்த ஆண்டுகளில் மாம்பழங்களின் விற்பனை விபரம் குறித்த தகவல் வெளியிட்டனர்.