உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நகை கடை கொள்ளையை பார்த்த முதியவர் கொலை

நகை கடை கொள்ளையை பார்த்த முதியவர் கொலை

மாண்டியா : நகைக் கடையில் கொள்ளை அடிப்பதை நேரில் பார்த்த முதியவரை மர்ம கும்பல் கொலை செய்ததால், கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின் கிருகாவலு கிராமத்தில், 'மஹாலட்சுமி ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நகைகளை அடகு வைத்து பணம் வழங்கும் கடை உள்ளது. இந்த நகைக் கடையில் கொள்ளை அடிக்க, மர்ம கும்பல் நீண்ட நாட்களாக சதித்திட்டம் தீட்டினர். இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு, நகைக்கடைக்கு வந்தனர். காஸ் கட்டரால், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, லாக்கரில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்தனர். வெளியே வரும் போது, அதே பகுதியில் வசிக்கும் ஹோட்டல் உரிமையாளர் மாதப்பா, 72, சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். இவரை பார்த்த கொள்ளையர்கள், முதியவரை விட்டு வைத்தால், சாட்சியம் கூறுவார் என நினைத்து, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடினர். நகைக் கடையின் கண்காணிப்பு கேமராவின் டி.வி.ஆரை எடுத்து சென்றுள்ளனர். நேற்று காலை முதியவர் இறந்து கிடப்பதையும், நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதையும் பார்த்த கிராமத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த மலவள்ளி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதன்டி உட்பட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதே இடத்தில், கடந்த வாரம் பெண்ணிடம் தங்கச்செயின் பறிப்பு நடந்தது. இப்போது கொள்ளையர்கள் புகுந்ததால் கிராமத்தினர் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை