உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பக்தர்களுக்கு மின் துறை அறிவுரை

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பக்தர்களுக்கு மின் துறை அறிவுரை

மைசூரு: ''மழை காலம் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை. மின் ஒயர்கள், டிரான்ஸ்பார்மர்களில் பதாகைகள், பலகைகளை மாட்டக்கூடாது,'' என விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம், வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, சி.இ.எஸ்.சி., எனும் சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவன நிர்வாக இயக்குநர் முனிகோபால் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பண்டிகை கொண்டாட்டத்தின் போது, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எந்த பேரழிவுகளும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பண்டிகைக்காக சட்ட விரோதமாக, மின்சார ஒயர்களில் இருந்து மின் இணைப்பு பெறுவதற்கு பதில், சி.இ.எஸ்.சி.,யின் துணை பிரிவு அல்லது கிளை அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று, இணைப்பை பெற வேண்டும். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும், மின் கம்பிகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். பந்தல், மண்டபங்களை மின் ஒயர்களுக்கு அடியிலோ அல்லது அருகிலோ வைக்க கூடாது. சிறிது தொலைவில் வைத்து கொண்டாடலாம். மழை காலம் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை. மின் ஒயர்கள், டிரான்ஸ்பார்மர்களில் பதாகைகள், பலகைகளை மாட்டக்கூடாது. விநாயகர் சிலை கரைக்கும் போது, கொடிகள், கட் அவுட்கள், மின் ஒயர்களை தொடும் வகையில் வைக்க கூடாது. சிலை கரைக்கும் ஊர்வலம் நடக்கும் சாலைகளில் உள்ள மின் ஒயர்களில் ஏதேனும் தடை இருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி மின் வினியோக அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மின் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி