உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சலுவாம்பா மருத்துவமனை நோயாளிகளுக்கு தரமற்ற உணவு இருவரை சஸ்பெண்ட் செய்த உணவு கமிஷன் தலைவர்

சலுவாம்பா மருத்துவமனை நோயாளிகளுக்கு தரமற்ற உணவு இருவரை சஸ்பெண்ட் செய்த உணவு கமிஷன் தலைவர்

மைசூரு: மைசூரு நகரில் உள்ள சலுவாம்பா மருத்துவமனையில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் தரமில்லாதது உட்பட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்த மாநில உணவு கமிஷன் தலைவர் டாக்டர் கிருஷ்ணா, இது தொடர்பாக இரண்டு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார்.மைசூரு நகரின் கே.ஆர்., மருத்துவமனை மற்றும் சலுவாம்பா மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் மாநில உணவு கமிஷன் தலைவர் டாக்டர் கிருஷ்ணா திடீரென ஆய்வு செய்தார்.

துர்நாற்றம்

மருத்துவமனையில் சுத்தமின்மை, தாய் - சேய்க்கு வழங்கப்பட்ட உணவின் தரம் சரியில்லாதது மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.பின், அவர் அளித்த பேட்டி:மருத்துவமனைகளில் உணவு தரம் உட்பட பல புகார்கள் எங்களுக்கு வந்தன. டெண்டரில் குறிப்பிட்டபடி, சலுவாம்பா மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்காதது தெரிந்தது.காலாவதியான உணவு பொருட்களை விநியோகித்திருப்பது தெரிய வந்துள்ளது. கழிப்பறை அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனை முழுதும் குப்பை கொட்டி கிடக்கிறது. அதில் இருந்து எழும் துர்நாற்றத்தால், இவ்வழியாக நடந்து செல்வது சிரமமாக உள்ளது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.சுத்தமான குடிநீர் விநியோகிக்க நிதி ஒதுக்கியும், அதை செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். 24 மணி நேரத்திற்குள் சுத்தமான குடிநீர் மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.ஏழைகளுக்காக அரசு பல மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. சலுவாம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, இலவச சாதம், சப்பாத்தி, பருப்பு வகைகள், முட்டை, தயிர் வழங்க வேண்டும்.இங்குள்ள பெரும்பாலானோருக்கு இது பற்றிய தகவலும் தெரியவில்லை, உணவும் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள், இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தும், டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.எனவே தான் முன்னர் சஸ்பெண்ட் செய்யாமல் இருந்தோம். இனி இத்தகையவர்களுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்றால், அலட்சியமாக இருப்பது தொடரும். இங்கு பறிமுதல் செய்யப்பட்ட உணவு மாதிரிகள், ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

சஸ்பெண்ட்

தரமான உணவு பொருட்களை வழங்காத ஐ.என்.யு., துறையை சேர்ந்த லீலாவதி, லாரன்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.(அப்போது குறுக்கிட்ட சலுவாம்பா மருத்துவமனை மேற்பார்வையாளர் சுதா, 'இருவரும் பல ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் மட்டும் கொடுத்தால் போதுமே' என்றார்)இதை கேட்டு கோபமடைந்த டாக்டர் கிருஷ்ணா, 'அப்படியானால் உங்களை சஸ்பெண்ட் செய்கிறோம். அவர்களுக்கு பாடம் புகட்டவே, சஸ்பெண்ட் செய்கிறோம். அவரவர் பணியை சரியாக செய்திருந்தால், இது நடந்திருக்காது.சலுவாம்பா மருத்துவமனையில் 250 புதிய படுக்கைகள் இருந்தும், கிழிந்து கந்தலான படுக்கையில் தான் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இத்தகைய தவறுகள் நடக்கக்கூடாது.மருத்துவமனையில் ஆய்வு செய்ய செல்வது குறித்து, துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர்கள், ஊடகத்தினருக்கு தகவல் கொடுக்கவில்லை.அவர்கள் இங்கிருந்தால், ஊடகத்தினர் வந்துவிட்டனர் என்ற அச்சத்தில், மருத்துவமனையே களேபரமாகி இருக்கும். இதன் மூலம் மருத்துவ வசதிகள் மேம்பட்டிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை