உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சூரியனை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு காபி சூடாகத்தான் இருக்கும் வெள்ளோட்டம் வெல்லட்டும் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கலகல

 சூரியனை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு காபி சூடாகத்தான் இருக்கும் வெள்ளோட்டம் வெல்லட்டும் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கலகல

பெங்களூரு: ''சூரியனை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு காபி சூடாக தான் இருக்கும்,'' என்று, தனது புத்தக வெளியீட்டு விழாவில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கலகலப்பாக பேசி, புத்தக திருவிழாவுக்கு வந்தவர்களை குதுாகலப்படுத்தினார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடக்கும், நான்காவது தமிழ் புத்தக திருவிழாவில் நேற்று மாலை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய 'வெள்ளோட்டம் வெல்லட்டும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், இந்தியாவின் நிலவு மனிதருமான மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா எல்.1 திட்ட இயக்குநர் -இஸ்ரோ நிகர்ஷாஜி, டில்லிபாபு மனைவி செல்வி ஆகியோர் வெளியிட்டனர். ராக்கெட் கவுன்ட் டவுன் பின், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: டில்லிபாபு எழுதிய புத்தகத்தை கடந்த ஆண்டே வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அவரது தாய், இறைவனடியில் சேர்ந்ததால் தள்ளிபோனது. இப்போ வெளியிட்டு உள்ளோம். இந்த புத்தகத்தை எழுத அவருக்கு உறுதுணையாக இருந்த, குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள். இந்த நேரத்தில் அவர்களும் இங்கு இருப்பது மகிழ்ச்சி. விஞ்ஞானி தமிழில் எழுதிய புத்தகத்தை அவரது குடும்பமே வாசிக்கிறது. வரும் நாட்களில் நிறைய பேர் வாசிக்க உள்ளனர். புத்தக வாசிப்பு வட்டம் பெருகி கொண்டே செல்கிறது. நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ஒரு சிலர் என்னிடம் கூறினர். தமிழக மாணவர்களுக்கு 10 க்கு மேல் சொல்ல தெரியவில்லை என்று. ராக்கெட் கவுன்ட் டவுன் சொல்லும் நமக்கு, பத்துக்கு மேல் சொல்ல தெரியாதா என்று கூறி அவர்களுக்கு பதிலடி கொடுத்தேன். நானும், டில்லிபாபுவும் ஒன்றாக பயணிக்கும் போது, தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி பேசுவோம். இலக்கிய நயத்துடன் அறிவியலை சொல்ல முடியும். அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தவர்கள் நாம். சொல்ல நினைப்பதை தாய்மொழியில் சொல்ல வேண்டும். மொழிகளுக்கு எல்லாம் தாயாக இருப்பது தமிழ். தமிழர்களாக நாம் பிறந்ததே வரம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மீது பற்று விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது:

புத்தகம் எழுத மயில்சாமி அண்ணாதுரை என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்தியாவின் நிலவு மனிதனான அவருடன், பல பேர் 'செல்பி' எடுக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் அவரோ சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, திருவள்ளுவர் சிலை முன்பு உற்சாகமாக செல்பி எடுத்தார். இதில் இருந்தே அவருக்கு தமிழ் மீது உள்ள பற்று பற்றி அறிந்து கொள்ள முடியும். நானும் அவரும் சேர்ந்து 'விண்ணும் மண்ணும்', 'இந்தியா 75' என்று இரண்டு புத்தகம் எழுதி உள்ளோம். தற்போது அவருடன் நிறைய பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. வயிறு குலுங்க சிரிப்பு இஸ்ரோ திட்ட இயக்குநனர் நிகர்ஷாஜியும், நானும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஒன்றாக காபி குடித்த போது, காபி சூடாக இல்லை என்று என்னிடம் கூறினார். சூரியனை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு காபி சூடாக இருக்குமா என்று நினைத்து கொண்டேன். அப்போது பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். தொடர்ந்து பேசிய டில்லிபாபு, எனது வீட்டில் 'டிவி' இல்லை. டிவிக்கு ஒதுக்கிய இடத்தில் 3,000 புத்தகம் வைத்து உள்ளேன். தினமும் புத்தகம் படிக்கிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து புத்தகம் படித்து, நாட்டு நடப்புகள் பற்றி பேசுகிறோம். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்கிறேன். அதன் பின் புத்தகம் எழுதுகிறேன். பால் பவுடர் ஏற்றுமதி பணம் சம்பாதிக்க புத்தகம் எழுதவில்லை. நான் எழுதும் புத்தகத்தை கடைகோடி கிராமத்தில் வசிக்கும் சிறுமி படிக்க வேண்டும். அறிவியல் பற்றி தெரிந்து கொண்டால் எனக்கு சந்தோஷம். இந்தியாவில் பால் பவுடர் தட்டுப்பாட்டை நீக்கி, இப்போது பால் பவுடர் ஏற்றுமதியில் நாடு முதலிடத்தில் இருக்க காரணம் வர்க்கீஸ் குரியன் என்ற இன்ஜினியர் தான். அறிவியலை வெறும் பாடமாக மட்டும் பார்க்க கூடாது. அறிவியல் சிந்தனையை பொது வெளியில் பேச வேண்டும். கூட்டங்களில் பேச வேண்டும். இப்போது உங்கள் வாழ்க்கையில் அறிவியல், தொழில்நுட்பம் நுழைந்து விட்டது. அறிவியலை தினமும் பேச வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை