எது நடந்தாலும் ஆளுங்கட்சியே பொறுப்பு மாஜி முதல்வர் வீரப்ப மொய்லி கருத்து
பெங்களூரு: ''கர்நாடகாவில் என்ன நடந்தாலும், அதற்கு ஆளுங்கட்சியே பொறுப்பு. இது குறித்து, மூன்று விசாரணை தேவையில்லை,'' என முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.பெங்களூரில் தன் இல்லத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:சின்னசாமி விளையாட்டு அரங்கில், நடக்க கூடாத சம்பவம் நடந்துவிட்டது. இனி இது போன்று நடக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடவடிக்கை
சம்பவம் நடந்த நாளன்று விளையாட்டு அரங்கின் கேட் திறக்க தாமதம் செய்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசம்பாவிதம் நடக்கும் போது, அரசு கலக்கம் அடைய கூடாது. வெலவெலக்க கூடாது. கிரிக்கெட் வீரர்களை பார்க்க, ரசிகர்கள் வந்த போது அசம்பாவிதம் நடந்துள்ளது. அதற்காக அந்த விளையாட்டு போட்டிகளே நடக்க கூடாது. வேறு இடத்தில் நடக்க வேண்டும் என, அரசு நினைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. இதை பற்றி முதல்வருக்கு கடிதம் எழுதுவேன்.சர்வதேச கிரிக்கெட் போர்டுடன் பேச்சு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை, இடம் மாற்ற வேண்டும் என்பது சரியல்ல. அரசும், கிரிக்கெட் போர்டும் அவசர முடிவு எடுக்க கூடாது.ஒரு சம்பவம் குறித்து, இரண்டு, மூன்று விசாரணை அவசியம் இல்லை. தலைமை செயலர் தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும். தவறு செய்திருந்தால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யட்டும். இல்லையென்றால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.கிரிக்கெட்டின் இமேஜ் பாழாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசிகர்களின் எண்ணமும் இதுதான். கிரிக்கெட் அழியும் சூழ்நிலை ஏற்படக்கூடாது. ஆலோனை
தலைமை செயலர் அல்லது கூடுதல் தலைமை செயலர் தலைமையில், கமிட்டி அமைத்து, விசாரணை நடத்தட்டும். அதிகாரிகள் மீது அரசு நம்பிக்கை வைத்து பணியாற்ற வேண்டும்.என் பதவி காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, கர்நாடகாவில் இதே சூழ்நிலை ஏற்பட்டது. கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே டி.ஜி.பி.,யை இடம் மாற்றினேன். மீண்டும் அவரை பணியில் அமர்த்துவதாக கூறியிருந்தேன்.கர்நாடகாவில் என்ன நடந்தாலும், ஆளுங்கட்சியே பொறுப்பாளி. இதை பற்றி அதிகம் விவாதிப்பது தேவையற்றது. எதிர்க்கட்சிகள் இருப்பதே, அரசியல் செய்யத்தான். எதிர்க்கட்சிகள், அரசுக்கு நல்ல ஆலோனைகள் கூற வேண்டுமே தவிர, விமர்சிக்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.