பஸ் மீது ஜீப் மோதல் நால்வர் பரிதாப பலி
யாத்கிர்: மத்தரகி கிராமத்தின் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில், நால்வர் உயிரிழந்தனர்.யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின், வர்க்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பலர், கலபுரகியின் பத்தரகி கிராமத்தில் உள்ள பாக்யவந்தி கோவிலுக்கு, நேற்று காலை 'பொலிரோ' ஜீப்பில் புறப்பட்டனர்.ஷஹாபுராவின், மத்தரகி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ ஜீப், அரசு பஸ் மீது மோதியது. பொலீரோ வாகனத்தில் இருந்த சரணப்பா, 30, சுனிதா, 19, சோமவ்வா, 50, தங்கம்மா, 55, ஆகியோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.தகவலறிந்து அங்கு வந்த பீமராயனகுடி போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.