ஒருவரை மணமுடித்த தோழிகள்
சித்ரதுர்கா: திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என, பல ஆண்கள் பரிதவிக்கின்றனர். தங்களுக்கு பெண் கிடைக்க வேண்டும் என, கோவில் கோவிலாக பாதயாத்திரை செல்கின்றனர். ஆனால் ஒரு இளைஞர், ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். சித்ரதுர்கா நகரின், ஹொரபேட்டில் வசிப்பவர் வசீம் ஷேக், 28. இவரும் சித்ரதுர்காவில் வசிக்கும் ஷிபா ஷைக், 25, ஜன்னத் மகந்தர், 24, சிறு வயதில் இருந்தே பிரியாத நண்பர்கள். மூவரும் ஒரே கல்லுாரியில் படித்தவர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவர். இவர்களின் நட்பு நாளடைவில், காதலாக மாறியது. மூவரும் தங்களின் உறவை பலப்படுத்த விரும்பினர். ஷிபா ஷைக்கும், ஜன்னத்தும் வசீம் ஷேக்கை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மூவரின் குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்தனர். நேற்று காலை சித்ரதுர்கா நகரின், எம்.கே.பேலஸ் திருமண மண்டபத்தில், நேற்று காலை திருமணம் நடந்தது. திருமணத்தில் நுாற்றுக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்று, புதுமண தம்பதியை வாழ்த்தினர். இரண்டு மனைவியரும் ஒரே விதமான உடை அணிந்து, வசீமின் அக்கம், பக்கம் நின்றிருந்தனர். மூவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இவர்களின் திருமண வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.