காரில் வந்து குப்பை கொட்டியவருக்கு ஜி.பி.ஏ., ரூ.5,000 அபராதம்
பெங்களூரு: பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்த, அபராதம் விதித்தும் பொது மக்கள் மாறவில்லை. பிளாஸ்டிக் பைகளில் நிரப்பப்பட்ட குப்பையை, காரில் கொண்டு வந்து சாலையில் போட்ட நபருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூரின் சாலை ஓரங்கள், கால்வாய், காலி வீட்டு மனைகள் என, கண்ட இடங்களில் குப்பையைபோடுவதால், சுற்றுச்சூழல் அசுத்தமாகிறது. கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோய்கள் பரவ காரணமாகிறது. இதை மனதில் கொண்டு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பொது இடங்களில் குப்பையை போட்டால், அபராதம் விதிக்கிறது. வீட்டு வாசலுக்கு வரும் வாகனங்களில், குப்பையை போட வேண்டும். பொது இடங்களில் போடக்கூடாது என, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குப்பையை போடுவோரின் வீடுகளுக்கே சென்று, அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் வசூலித்தாலும், பொதுமக்கள் மாறவில்லை. பொது இடங்களில் குப்பையை போடுவதை நிறுத்தவில்லை. பெங்களூரின் சர்வக்ஞநகர் வார்டு எண் 29ல், நேற்று முன்தினம் இரவு காரில் வந்த நபர்கள், பெருமளவில் குப்பை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை போட்டு சென்றனர். குப்பை போட்ட நபர்களின் வீட்டை, போக்குவரத்து போலீசாரின் உதவியுடன், ஜி.பி.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். பொது இடங்களில் குப்பையை போடக்கூடாது என, எச்சரித்தனர். காரில் வந்து குப்பையை போட்டவர்களுக்கு, அபராதம் விதித்தது பற்றி, 'எக்ஸ்' வலை தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து, பயோகான் நிறுவனர் கிரண் மஜுந்தார் கூறுகையில், ''அபராத தொகை யை அதிகரிக்காவிட்டால், யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். பொது இடங்களில் குப்பை போடுவோருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். ''வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டும். வீடியோவில் தென்படும் இரண்டு நபர்களையும் கைது செய்திருக்க வேண்டும்,'' என் றார்.