| ADDED : டிச 06, 2025 05:32 AM
ஹாவேரி: கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. மாணவியர் ஹிஜாப் அணிந்து வருவதால், ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், உடுப்பியில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்த முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் என்ற, முகம் தெரியாத வகையிலான துணி அணிந்து வந்தனர். இதற்கு பதிலாக ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானது. இதை தீவிரமாக கருதிய அன்றைய பா.ஜ., அரசு, ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்லவும், தேர்வு எழுதவும் தடை விதித்தது. சீருடை அணிவதை கட்டாயமாக்கியது. பா.ஜ., அரசின் முடிவை எதிர்த்து, சில மாணவியர் உச்சநீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், அரசுக்கு சாதகமாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. கல்லுாரி மாணவர் இடையே சமத்துவம் இருக்க வேண்டும். கல்லுாரிக்குள் ஜாதி, மதங்களை கொண்டு செல்லக்கூடாது என, அறிவுறுத்தின. அதன்பின் சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகாவின், அக்கி ஆலுார் கிராமத்தில் உள்ள, அரசு பி.யு.சி., கல்லுாரியில் படிக்கும் முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணிந்து வருகின்றனர்; வகுப்பிலும் அமர்ந்துள்ளனர். இதை கல்லுாரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதற்கு போட்டியாக ஹிந்து மாணவர்களும் காவித்துண்டு அணிந்து கல்லுாரிக்கு வருகின்றனர். கல்லுாரி நிர்வாகம் உடனடியாக அவசர கூட்டம் நடத்தி, மாணவியர், பெற்றோருடன் பேசி, அரசின் உத்தரவை பின்பற்ற உத்தரவிடும்படி மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.