வாரிய தலைவர் பதவிக்கு எதிர்ப்பு 13ல் ஐகோர்ட்டில் விசாரணை
பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மாண்டியா மாவட்டம், மலவள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி. இவரை, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக, பிப்ரவரி 5ல் அரசு நியமித்தது. இவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கும்படி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற வக்கீல் ஸ்ரேயாஸ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'மாநில தலைமை செயலர், வனத்துறை முதன்மை செயலர், எம்.எல்.ஏ., நரேந்திர சாமி, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.