உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோவில் அருகில் அசைவ உணவு விற்க தடை மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கோவில் அருகில் அசைவ உணவு விற்க தடை மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: துமகூரு கோவில் அருகே அசைவ உணவு விற்க தடை கோரிய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துமகூரு மாவட்டம், சிவனகெரே கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ ஹொன்னேஸ்வர சுவாமி கோவில். கடந்தாண்டு 2024 ஜூலை 13ம் தேதி, அப்பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையம் சுற்றிக்கை வெளியிட்டிருந்தது. அதில், 'ஸ்ரீ ஹொன்னேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு அசைவு உணவு உட்கொள்ள கூடாது. 'தடையை மீறி அசைவ உணவு உட்கொண்டாலோ அல்லது விலங்குகளை பலியிட்டாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்ரீ ஹொன்னேஸ்வர சுவாமி கோவில் ஜீர்னோதர சேவா சமிதி அறக்கட்டளையினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி ஷியாம் பிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது: விலங்குகளை பலியிடுவதற்கு விதித்த தடைக்கு மனுதாரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், அசைவ உணவு சாப்பிடுவதற்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, சிக்கலாக உள்ளது. கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் கோவில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு இறைச்சி சாப்பிட கூடாது என்றால், கோவில் அருகில் சொந்த வீட்டில் உள்ளவர்களும் சாப்பிடுவதை தடுக்கிறது. தனியாரால் நிர்வகிக்கப்படும் இக்கோவிலுக்கு பல தலைமுறைகளாக கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோவில் அருகில் சமையல் அறையும், உணவு மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தில் சைவம், அசைவ உணவுகளை சமைக்கலாம். இது வளாகத்திற்கு வெளியே தான் வருகிறது. மேலும், 2024 செப்., 18ம் தேதி, போலீசின் அறிவுறுத்தலை ஏற்று, 'கோவில் வளாகத்திற்குள் எந்த விலங்கும் பலியிடப்படாது என்றும்; கோவிலுக்கு வெளியே உணது தயாரித்து உட்கொள்ளப்படும் என்று தெளிவாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தும், இதுவரை போலீசாரிடம் இருந்து பதிலோ அல்லது விளக்கமோ வரவில்லை. எனவே, இவ்வழக்கு விசாரணை முடியும் வரை, போலீசாரின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். இந்த வாதத்தை கவனத்தில் கொண்ட நீதிபதி ஷியாம் பிரசாத், 'தடைக்கான காரணம் குறித்தும் உள்ளூர் போலீசார், அப்பகுதியில் உள்ள பக்தர்களின் பழக்க வழக்கங்களை போலீசார் கணக்கில் எடுத்து கொண்டார்களா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். 'இதுதொடர்பாக பதிலளிக்க, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது' என கூறி, வரும் 10ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி