ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியே அழைத்து பேசுவேன்: பா.ஜ., பொறுப்பாளர்
சென்னை: 'தி.மு.க., வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே, பா.ஜ.,வின் முதல் குறிக்கோள். அதைநோக்கி தான் தேர்தல் பணிகள் இருக்க வேண்டும். 'ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியே அழைத்து பேசுவேன்' என, தமிழக பா.ஜ., சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, மாநில நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலை யில், தமிழக பா.ஜ.,வில், தேர்தல் பணிகளை கண்காணிக்க, தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் ஆகியோரை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா சமீபத்தில் நியமித்தா ர். சென்னை தி.நகர் கமலாலயத்தில், தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜயந்த் பாண்டா, முரளிதர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாநிலத் தலைவர் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த்மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தல் பணி கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிர்வாகிகளில் பலர், 'தி.மு.க.,வை தோற்கடிக்க பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வேண்டும். 'அதற்கு, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும்; அ.தி.மு.க., உடன் தொகுதி பங்கீட்டு பேச்சில், அதிக இடங்களையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் கேட்டு பெற வேண்டும்' என, தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பைஜயந்த் பாண்டா பேசுகையில், 'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதுதான் பா.ஜ.,வின் முதல் குறிக்கோள். அதைநோக்கி தமிழக பா.ஜ.,வினர் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். 'தமிழகத்திற்கு தொடர்ந்து வருவேன். ஒவ்வொரு மாநில நிர்வாகியையும், தனித்தனியே அழைத்து பேசுவேன். அவர்கள் தெரிவிக்கும் தகவல்களை, மேலிடத் தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்' எனக் கூறியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பா.ம.க., நிர்வாகி
சந்திப்பால் பரபரப்பு
கமலாலயத்தில் பைஜயந்த் பாண்டா, முரளிதர் ஆகியோரை, பா.ம.க., அன்புமணி தரப்பைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, நேற்றிரவு சந்தித்து பேசினார். பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை இன்று சந்தித்து பேச உள்ளதாவும், தகவல் வெளியாகி உள்ளது.