2028 சட்டசபை தேர்தலிலும் நான் போட்டியிட... அழுத்தம்! ; சித்தராமையா அதிரடியால் சிவகுமார் தரப்பு பீதி
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தற்போது, 77 வயது ஆகிறது. மைசூரின் வருணா தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 'வரும் 2028ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். என் மகன் யதீந்திரா, பேரன் தவான் ராகேஷ் ஆகியோர் எனது அரசியல் வாரிசுகள்' என்று, சித்தராமையா சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். பேரன் தவான் ராகேஷை, சில அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் அடுத்த தேர்தலில், அவர் கண்டிப்பாக போட்டியிட மாட்டார் என்றே, அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. தேசிய அரசியல் இந்நிலையில், மங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சித்தராமையா அளித்த பேட்டியில், ''நான் தற்போது முதல்வராக உள்ளேன். கட்சி மேலிடம் அனுமதித்தால் மேலும் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பேன். மேலிடம் எடுக்கும் முடிவுக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும். ''இதுவே எனது கடைசி தேர்தல் என்று, சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தேன். ஆனால் எனது ஆதரவாளர்கள், தொகுதி மக்கள் வரும் 2028 சட்டசபை தேர்தலிலும் போட்டியிடும்படி, எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதுகுறித்து வரும் நாட்களில் முடிவு செய்வேன். தேசிய அரசியலுக்கு செல்ல நான் தயாராக இல்லை,'' என்றார். இதன்மூலம் அடுத்த தேர்தலிலும் போட்டியிட சித்தராமையா தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஓய்வே இல்லை இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்று கூறுகையில், ''சித்தராமையா அடுத்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும். அவரது கடைசி காலம் வரை, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற கூடாது. இது என் தனிப்பட்ட கருத்து. தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று அவரிடம் நான் கோரிக்கை வைப்பேன். அவர் அரசியலில் இருப்பது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மை தரும்,'' என்றார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக தான், சித்தராமையாவை முதல்வராக எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்து எடுத்தனர். அவர், தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், முதல்வர் மாற்றம் நடப்பதாக கூறப்படுவது பற்றி, என்னிடம் எந்த தகவலும் இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடுவதும், போட்டியிடாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட முடிவு. அவரது முடிவில் நாம் தலையிட முடியாது,'' என்றார். கலையும் கனவு அதே நேரம், சித்தராமையாவின் அறிவிப்பு, சிவகுமார் தரப்புக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்வர் பதவி விஷயத்தில் சிவகுமாருக்கு, சித்தராமையாவும், அவரது ஆதரவு அமைச்சர்களும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இரண்டரை ஆண்டுக்கு பின், சித்தராமையா முதல்வர் பதவியை விட்டு தருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இம்முறை 5 ஆண்டுகளும் சித்தராமையா பதவியில் இருந்தாலும், அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார். அவரது ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்து, முதல்வராகி விடலாம் என்று, சிவகுமார் கணக்கு போட்டு இருந்தார். அடுத்த தேர்தலில் ஒருவேளை சித்தராமையா போட்டியிட்டு வெற்றி பெற்று, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் என்று கூறி, மீண்டும் முதல்வர் பதவியை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால், தனது முதல்வர் பதவி கனவாகவே முடிந்து விடுமோ என, சிவகுமார் தரப்பு கலக்கத்தில் உள்ளது.