உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்பினால்... சன்மானம்!: பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு

சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்பினால்... சன்மானம்!: பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு

பெங்களூரில் குப்பை பிரச்னை என்பது தீர்வு காண முடியாத பிரச்னையாக உருமாறி உள்ளது. துப்புரவு பணியாளர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் பணி செய்தாலும் சாலைகள் குப்பையாகவே காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் பலரும் சாலையில் குப்பைகளை வீசி செல்வது முக்கிய காரணமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் காலையிலே வீடு, வீடாக குப்பை சேகரிக்க வந்தாலும், பலரும் குப்பையை கொடுப்பதில்லை. அவர்கள் சென்ற பின், சர்வ சாதாரணமாக, 'எனக்கென்ன போச்சு' என்ற ரீதியில் கண்ட இடங்களில் குப்பையை வீசி விட்டு செல்கின்றனர். குப்பை ராஜா இதனால், நகரின் பிரதான சாலைகள் கூட குப்பை காடாக காட்சி அளிக்கின்றன. சிவாஜி நகரில் உள்ள பல சாலைகள் குப்பைகளின், 'ராஜா'வாக திகழ்கின்றன. இந்நிலையை மாற்ற ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், 'பிளாக் ஸ்பாட்டுகள்' அகற்றம், கோலம் போடுவது, பச்சை துணியால் மூடுவது என பல முயற்சிகள் எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அதிகாரிகள் கடந்த மாதம் 30ம் தேதி, 'குப்பை திருவிழா' எனும் பெயரில் சாலையில் குப்பை கொட்டுவோருக்கு, 'குட்டு' வைத்தனர். அதாவது, குப்பையை சாலை ஓரங்களில் வீசுவோரை மார்ஷல்கள் வீடியோ எடுத்து, அவர்களின் வீட்டை அடையாளம் கண்டு, அவர்களின் வீட்டின் முன், குப்பை குவியலை கொட்டினர். மேலும், குப்பையை வீசிய நபருக்கு அபராதமும் விதித்தனர். இச்சம்பவம் நகரவாசிகளிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவிய வண்ணம் இருந்தன. புது முயற்சி இருப்பினும், 'நாம் குப்பை கொட்டுவதை மார்ஷல்கள் கண்டுபிடிக்கவா போகின்றனர்' என, சில அறிவு ஜீவிகள் நினைத்து கொண்டு குப்பை வீசுவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். இவர்களின் ஆட்டத்தை அடக்க, மற்றொரு புதிய முயற்சியில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் இறங்கி உள்ளது. அதாவது, குப்பையை பொது இடங்களில் வீசும் நபர்களை, யார் வேண்டுமானாலும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்யலாம். வீடியோவை, '94481 97197' என்ற வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும், வீடியோ எடுக்கப்பட்ட இடம், அந்நபர் குறித்த விபரங்களை பகிர வேண்டும். இதன்படி குப்பையை வீசிய நபர், அவரது வீடு அடையாளம் காணப்படும். அவரது வீட்டின் முன்பு, ஆட்டோவில் உள்ள குப்பைகள் கொட்டப்படும். மேலும், அந்நபருக்கு 1,000 முதல் 10,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். இழப்பீடு இல்லை அதுமட்டுமின்றி வீடியோவை அனுப்பிய நபருக்கு, 250 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். சன்மானம், அவரது யு.பி.ஐ., கணக்குக்கு அனுப்பப்படும். இந்த சன்மான தொகையால் இழப்பு எதுவும் ஏற்படாது. ஏனெனில், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் போது, அப்பணத்தில் இருந்தே சன்மானம் வழங்கப்படுவதால் இழப்பீடு எதுவும் ஏற்படாது. ஆக, மார்ஷல்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்க போகின்றனரா என குப்பை வீசி அத்துமீறியவர்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரரால் கூட 10,000 ரூபாய் பறிபோகலாம் என்ற பயத்தின் மூலம் குப்பை வீசும் சம்பவங்கள் குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ... பாக்ஸ் ... * சோம்பேறிகள் பெங்களூரில் 800க்கும் மேற்பட்ட, 'பிளாக் ஸ்பாட்'டுகள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், அதே பகுதிகளில் மக்கள் இன்னும் குப்பையை வீசிவிட்டு செல்கின்றனர். அவர்கள் தங்கள் வீட்டு வாசலுக்கு வரும் வாகனங்களில் குப்பை கொட்டுவதில் சோம்பேறித்தனமாக இருக்கின்றனர். அதனால் தான் இந்த புதிய முடிவை எடுத்து உள்ளோம். கரீகவுடா, தலைவர், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி