பெங்களூரு: முதல்வர் சித்தராமை யாவுக்கு துணை முதல்வர் சிவகுமார், சிற்றுண்டி விருந்து அளித்தார். அப்போது, பல முக்கிய விஷயங்கள் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பதவி விஷயத்தில், சித்தராமையா, சிவகுமார் இடையே ஏற்பட்ட மோதல், தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதை தீவிரமாக கருதிய காங்., மேலிடம், முதல்வர் பதவி குறித்து, சம்பந்தப்பட்ட சித்தராமையா, சிவகுமார் மட்டும் தனியாக பேச்சு நடத்தி, குழப்பத்தை சரி செய்யும்படி உத்தரவிட்டது. சட்டசபை இதன்படி நவம்பர் 29ல் முதல்வர் சித்தராமையா, தன் இல்லத்தில் காலை சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்து, துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, 'பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின், முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்கலாம்' என, முடிவு செய்தனர். அடுத்த கட்ட பேச்சு நடத்தும் நோக்கில், சிவகுமார் தன் இல்லத்தில் நேற்று முதல்வர் சித்தராமையாவுக்கு, சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். காலை 9:30 மணிக்கு சதாசிவ நகரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்த, முதல்வர் சித்தராமையாவை, சிவகுமார் வாசலில் நின்று வரவேற்றார். அப்போது அவரது தம்பி சுரேஷ், முதல்வரின் பாதங்களை தொட்டு நமஸ்கரித்தார். முதல்வருக்கு பிடித்தமான நாட்டு கோழிக் குழம்பும், இட்லியும் சிவகுமார் பரிமாறினார். அதன்பின் இருவரும் ரகசியமாக பேச்சு நடத்தினர். ஆலோசனை முடிந்ததும், இருவரும் ஒன்றாகவே வெளியே வந்தனர். முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி: நானும், சிவகுமாரும் எப்போதும் சகோதரர்கள்தான். ஒரே கொள்கை, சித்தாந்தத்தை ஏற்றுள்ளோம். நான் அசைவம்; சிவ குமார் சைவம். எனவே, அவர் என் வீட்டுக்கு வந்த போது, சைவ உணவுகளை தயார் செய்திருந்தேன். என்னை சிவகுமார் சிற்றுண்டிக்கு அழைத்த போது, கிராமத்தில் இருந்து நாட்டுக் கோழி வரவழைக்கும்படி கேட்டிருந்தேன். இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். கட்சி விஷயங்கள் பற்றியும் ஆலோசித்தோம். வரும் 8ம் தேதி, பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. அங்கு விவாதிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டோம். டில்லி பயணம் எதிர்க்கட்சிகள் எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக தகவல் வந்தது. அதை நாங்கள் ஒற்றுமையாக எதிர்கொள்வோம். மாநில பிரச்னைகள், கரும்பு விவசாயிகள், மக்காச்சோளம் ஆதரவு விலை உட்பட பல விஷயங்கள் பற்றி ஆலோசித்தோம். டிசம்பர் 8ல் டில்லிக்கு சென்று, கர்நாடக எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். நேரம் ஒதுக்கி கொடுத்தால், கட்சி மேலிடத்தை சந்திப்பேன். டில்லியில் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடந்து கொள்வோம். ராகுல் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் எம்.எல்.ஏ.,க்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். 2028ல் ஒற்றுமையாக பணியாற்றி, கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார். சிவகுமார் கூறியதாவது: முதல்வரை நானே முதலில் சிற்றுண்டிக்கு அழைத்தேன். ஆனால், அவர் நீங்களே முதலில் வாருங்கள் என, அழைத்தார். எனவே சனிக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றேன். இன்று (நேற்று) என் வீட்டில் அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்தேன். மைசூரு பாணியில் உணவு மெனுக்கள் தயார் செய்திருந்தேன். சிற்றுண்டி முடிந்த பின், அரசியல் விஷயங்களை பேசினோம். நான்கு எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய வேண்டும். அதை பற்றியும் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.