உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாநிலத்தில் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

மாநிலத்தில் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜூலையில், 1,136.36 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 756.61 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இதுகுறித்து, மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2022ம் ஆண்டில், நல்ல மழை பெய்தது. அந்த ஆண்டு ஜூலையில் 1,162.04 மில்லியன் யூனிட் நீர் மின்சாரம் உற்பத்தியானது. அதேபோன்று நடப்பாண்டு ஜூலையிலும், நல்ல மழை பெய்துள்ளதால், நீர் மின் உற்பத்தி அணைகளான லிங்கனமக்கி, சூபா, மானி அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. தினமும் 51.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து, சராவதி நீர் மின் உற்பத்தி நிலையத்தின் 10 யூனிட்களிலும், நிரந்தரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மாநிலத்தில் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் 1,136.36 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 756.61 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. மழைக்காலம் என்பதால், மின் தேவை குறைந்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான அழுத்தம் குறைந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது தினமும் 217.97 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 60.96 மில்லியன் யூனிட் மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, 58.17 மில்லியன் யூனிட். மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து 47.81 மில்லியன் யூனிட் உட்பட, பல வழிகளில் இருந்து, கர்நாடகாவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. தற்போது நீர் மின் உற்பத்தி அணைகளில், 250 நாட்களுக்கு தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு நீர் இருப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை