உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டு முறை தேர்தல் கமிஷனர் சங்கரேஷி பேட்டி
பெங்களூரு: ''கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில தேர்தல் ஆணையர் சங்கரேஷி கூறி உள்ளார். கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டை பயன்படுத்த, மாநில தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்ய, கர்நாடக அமைச்சரவையில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி மாநில தேர்தல் ஆணையர் சங்கரேஷி நேற்று அளித்த பேட்டி: கிராம பஞ்சாயத்து தேர்தலில், ஓட்டுப் போட இன்னும் ஓட்டுச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற தேர்தல்களில் தான் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்து தேர்தலை போலவே, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்தலாம் என்று, நான் முன்பே கூறி இருந்தேன். எனது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று, அமைச்சரவையில் அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும் என்று எதுவும் இல்லை. நாங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டுகளால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இருந்து, ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அரசு கொடுத்த அழுத்தத்தால் தான், ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்து இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்திய, பல நாடுகள் ஓட்டுச்சீட்டு முறையில் தற்போது தேர்தலை நடத்துகின்றன. நமது மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்த முடிவு செய்து இருப்பது பற்றி, பா.ஜ., தலைவர்களுக்கு ஏன் கவலை? இது அரசின் முடிவு. உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு. எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்த முடிவு செய்து உள்ளோம். சித்தராமையா, முதல்வர்