உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொம்மசந்திரா - ஓசூர் இடையே மெட்ரோ பாதை அமைக்க சாத்தியம் இல்லை

பொம்மசந்திரா - ஓசூர் இடையே மெட்ரோ பாதை அமைக்க சாத்தியம் இல்லை

பெங்களூரு: 'பெங்களூரு பொம்மசந்திராவில் இருந்து தமிழகத்தின் ஓசூருக்கு, நேரடி மெட்ரோ பாதை அமைப்பது சாத்தியம் இல்லை' என, கர்நாடக அரசுக்கு, பி.எம்.ஆர்.சி.எல்., அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கர்நாடகா - தமிழகத்தின் எல்லையில் உள்ள ஓசூரில் இருந்து, பெங்களூருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலை, மருத்துவ விஷயங்களுக்கு வந்து செல்கின்றனர். ஓசூரில் இருந்து பெங்களூரு 40 கி.மீ., துாரத்தில் இருந்தாலும், ஓசூர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், நகருக்குள் பஸ்களில் வர நீண்ட நேரம் ஆகிறது. தற்போது ஆர்.வி.ரோட்டில் இருந்து, ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை, மெட்ரோ ரயில் இயக்குவது, ஓசூரில் இருந்து வருவோருக்கு அனுகூலமாக உள்ளது. தற்போது, பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை, மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணியரிடையே எழுந்துள்ளது. ஓசூர் வரை மெட்ரோவை நீட்டிக்கும் திட்டம், கர்நாடக அரசிடமும் இருந்தது. பெங்களூரு, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இணைந்து, ஓசூர் வரை மெட்ரோவை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இரு மாநில அதிகாரிகளும் இணைந்து பாதையை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக கர்நாடக அரசிடம் பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பொம்மசந்திராவில் இருந்து ஓசூருக்கு நேரடி மெட்ரோ பாதை அமைப்பது சாத்தியம் இல்லை. ஓசூரில் இருந்து பொம்மசந்திரா வரையில், மெட்ரோ பாதை அமைத்தால், 25,000 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்தி ரயில்களை இயக்கலாம் என்று, சென்னை மெட்ரோ அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் பெங்களூரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 750 கிலோ வாட் மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன. அதிவேக ரயில், நீண்ட துாரம் செல்லும் ரயில்களுக்கு மட்டுமே 25,000 கிலோ வாட் மின்சாரம் பயன்படுகிறது. நகருக்குள் குறைந்த துாரத்தில் இயக்க அவ்வளவு கிலோ வாட் மின்சாரம் தேவை இல்லை. பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வரை 750 கிலோ வாட் மின்சாரத்தில் மெட்ரோ ரயில் இயக்க முடியும். தொழில்நுட்ப பிரச்னைகளால், ஓசூர் வரை மெட்ரோவை நீட்டிப்பது சாத்தியம் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடைமேம்பாலம் இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'நாங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். இறுதி முடிவு எடுக்க வேண்டிய அரசு தான். ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி எல்லை வரை, தமிழக அரசும்; அத்திப்பள்ளி வரை மெட்ரோ சேவையை, கர்நாடக அரசும் நீட்டித்தால் மக்களுக்கு பயன் அளிக்கும். இரு இடத்திற்கு 300 மீட்டர் இடைவெளி தான் இருக்கும். இரு ரயில் நிலையங்களையும் இணைக்க நடை மேம்பாலம் கட்டினால் போதும்' என்றனர். ஓசூர் வரை மெட்ரோவை நீட்டித்தால், தமிழகம் தான் அதிகம் பயன் பெறும். இதனால் ஓசூர் வரை மெட்ரோவை கொண்டு செல்லும் திட்டத்தை, கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, சில அமைப்புகள் வலியுறுத்திய நிலையில், பி.எம்.ஆர்.சி.எல்., இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

68 கி.மீ., புதிய பாதை

பெங்களூரு மாதவாராவில் இருந்து துமகூரு வரை 59 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையையும், அரசு உத்தரவின்படி, மெட்ரோ அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இதுதவிர தொட்டஜாலா - தேவனஹள்ளி; கே.ஆர்.புரம் - ஹொஸ்கோட்; கடபகெரே - தாவரகெரே வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பது தொடர்பாகவும்; காலேன அக்ரஹாராவில் இருந்து காடுகோடி வரை 68 கி.மீ., துாரத்திற்கு புதிய மெட்ரோ பாதை அமைப்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படும் துாரம், பணிகள் நடந்து வரும் துாரம் என, 467 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரிலும் 467.69 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை