உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் கடிதம் வாயிலாக... கருத்து கணிப்பு?: சித்து ஆதரவு அமைச்சரான ஜார்ஜுடன் சிவகுமார் சந்திப்பு

கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் கடிதம் வாயிலாக... கருத்து கணிப்பு?: சித்து ஆதரவு அமைச்சரான ஜார்ஜுடன் சிவகுமார் சந்திப்பு

பெங்களூரு: முதல்வர் பதவியில் அமர, யாருக்கு ஆதரவு அதிகம் என்பது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் கடிதம் வாயிலாக கருத்து கணிப்பு நடத்தும்படி, கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க, துணை முதல்வர் சிவகுமார் தயாராகி வருகிறார். மேலும், சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர் ஜார்ஜை, சிவகுமார் சந்தித்து பேசி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க, சிவகுமாரின் ஆதரவாளர்களான நயனா மோட்டம்மா உள்ளிட்ட மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றுள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, கடந்த 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் முடிந்தது. முதல்வர் பதவி மாற்றம் தொடர்பாக, கட்சி மேலிடத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததாலும், நானே முதல்வர் என்று சித்தராமையா அறிவித்ததாலும், துணை முதல்வர் சிவகுமார் கடுப்பானர். தனது ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜேகவுடா, மந்தர் கவுடா, சிவண்ணா, சீனிவாசய்யா உள்ளிட்டோரை டில்லிக்கு அனுப்பி வைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை கடந்த 21ம் தேதி சந்தித்து பேசி, சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தினர். கார்கே கடுப்பு மறுநாள் பெங்களூரு வந்த மல்லிகார்ஜுன கார்கேயை, சித்தராமையா சந்தித்து பேசினார். டில்லி சென்றிருந்த சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பெங்களூரு திரும்பினர். முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், சிவகுமாரும் மாறி, மாறி கொடுத்த அழுத்தத்தால் கடுப்பான கார்கே, 'சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை; கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், இன்று டில்லி செல்லும் கார்கே, ராகுலை சந்தித்து பேச உள்ளார். முதல்வர் பதவிக்கான மோதல் அதிகரித்து உள்ளதால், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 8 பேர் பயணம் கார்கே இன்று டில்லி செல்ல உள்ள நிலையில், தன் ஆதரவாளர்களான பெண் எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா, எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, சரத் பச்சேகவுடா, உதய், மகேந்திர கல்லப்பா தம்மன்னவர், பாபாசாகேப் பாட்டீல், இக்பால் உசேன், பசவராஜ் சிவகங்கா ஆகிய எட்டு பேரை, டில்லிக்கு அனுப்பி வைத்து உள்ளார் சிவகுமார். நேற்று டில்லி சென்ற எட்டு பேரும், கட்சியின் தேசிய பொது செயலர் வேணுகோபாலை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. இன்று டில்லி செல்லும் கார்கேயை சந்தித்து முறையிட உள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளதோ, அவர்களை முதல்வராக அறிவிப்பது காங்கிரஸ் வழக்கம். கடந்த 2023 தேர்தலுக்கு பின், முதல்வர் பதவிக்கு இதேபோன்று சண்டை ஏற்பட்ட போது, மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூரு வந்தனர். தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏ.,க்களுடன் கூட்டம் நடத்தி கருத்து கேட்டனர். பெரும்பாலானோர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருந்ததால், அவர் முதல்வரானார். இதை கருத்தில் கொண்டுள்ள சிவகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். சித்து டீம் ஷாக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர், சிறையில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் வினய் குல்கர்னி, வீரேந்திர பப்பியை சந்தித்து ஆதரவு திரட்டினார். தனக்கு ஆதரவாக 70 எம்.எல்.ஏ.,க்களை திரட்டவும், சிவகுமார் முடிவு செய்து உள்ளார். குறிப்பாக முதல்முறை எம்.எல்.ஏ., ஆனவர்களை அவர் குறிவைத்து உள்ளார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், முதல்முறை எம்.எல்.ஏ., ஆனவர்களில் பெரும்பாலானோர், சிவகுமாரின் ஆதரவாளர்களாக தான் உள்ளனர். ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த சிவகுமாருக்கு, அச்சமூக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று, சித்தராமையா டீம் நினைத்து கொண்டு இருந்தது. ஆனால் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த சிவண்ணா, சீனிவாசய்யா, நயனா மோட்டம்மா, மகேந்திர கல்லப்பா தம்மன்னவர், லிங்காயத் சமூகத்தின் பசவராஜ் சிவகங்கா, பாபாசாகேப் பாட்டீல், முஸ்லிம் சமூகத்தின் யாசிர் அகமதுகான் பதான் உள்ளிட்டோரின் ஆதரவும் சிவகுமாருக்கு இருப்பது, முதல்வர் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. * நம்பிக்கை முதல்வர் பதவி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மேலிட தலைவர்கள் தன்னை டில்லிக்கு அழைத்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை கடிதம் வாயிலாக கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்று, அழுத்தம் கொடுக்கவும் சிவகுமார் முடிவு செய்துள்ளார். கருத்து கணிப்பு நடத்தினால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்றும் உறுதியாக நம்புகிறார். இதற்கிடையில், முதல்வரின் ஆதரவாளரான மின் துறை அமைச்சர் ஜார்ஜை, சிவகுமார் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். அப்போது, 'நாம் இருவரும் கட்சியில் 40 ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து வருகிறோம். நான் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். மேலிட ஒப்பந்தத்தை மீறி சித்தராமையா நடந்து கொள்வது சரியா. நண்பர் என்ற அடிப்படையில், உங்கள் ஆதரவை எனக்கு கொடுங்கள்' என்று ஜார்ஜிடம், சிவகுமார் கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஜார்ஜ் கூறுகையில், ''சிவகுமாருக்கும், எனக்கும் 40 ஆண்டு நட்பு உள்ளது. அவரை இதற்கு முன்பும், பல முறை சந்தித்து உள்ளேன். இப்போது சந்தித்ததற்கு புது அர்த்தம் கொடுக்க வேண்டாம். ஜி.பி.ஏ., தேர்தல் தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன்,'' என்றார். கிறிஸ்துவரான ஜார்ஜ், காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 70 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''சிவகுமாருக்கு முன்பு 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. எனக்கு கிடைத்த தகவல்படி தற்போது, 70 பேர் ஆதரவு உள்ளது. இது எப்படி சாத்தியம் ஆனது? சிவகுமார் ஏதாவது மாயாஜாலம் செய்தாரா. ''நாங்கள் கூறுவது போல அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். நானே முதல்வர் என்று கூறி வந்த சித்தராமையா முகம், கடந்த இரண்டு நாட்களாக களையிழந்து உள்ளது. பெயருக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவராக கார்கே உள்ளார். முடிவு எடுக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை,'' என்றார். ============== ராகுலுடன், ஹரிபிரசாத் சந்திப்பு காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி.,யான ஹரிபிரசாத், டில்லியில் நேற்று ராகுலை திடீரென சந்தித்து பேசினார். கட்சியில் என்ன நடக்கிறது என்று அவரிடம் இருந்து முழு தகவலையும் பெற்று உள்ளார். சித்தராமையாவிடம் இருந்து பதவியை பறித்தால் என்ன நடக்கும், சிவகுமாருக்கு முதல்வர் பதவி கொடுத்தால் கட்சி நிலைக்குமா என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து கேட்டறிந்து உள்ளார். சந்திப்புக்கு பின் வெளியே வந்த ஹரிபிரசாத், ஊடகத்தினரிடம் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி சென்று விட்டார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ