உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குக்கே சுப்பிரமண்யா கோவில் ஊழியர்களுக்கு 8 வாரங்களுக்குள் ஊதியம் வழங்க உத்தரவு

குக்கே சுப்பிரமண்யா கோவில் ஊழியர்களுக்கு 8 வாரங்களுக்குள் ஊதியம் வழங்க உத்தரவு

பெங்களூரு: 'குக்கே சுப்பிரமண்யா கோவில் ஊழியர்களுக்கு, ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி, 2018 ஏப்ரல் முதல் கணக்கிட்டு, எட்டு வாரங்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநில அரசுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 2018ம் ஆண்டு முதல் ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்பிரமண்யா கோவிலில் பணியாற்றும் 200 ஊழியர்களை தவிர, மற்ற கோவில் ஊழியர்களுக்கு இந்த ஊதிய பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து, இக்கோவில் ஊழியர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர். மனுவை விசாரித்த நீதிபதி, ஆறாவது ஊதிய குழு பரிந்துரையை, இக்கோவில் ஊழியர்களுக்கும் செயல்படுத்தும்படி, 2024 மார்ச் 20ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை செயல்படுத்தாததால் கோவில் ஊழியர்கள், உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அனு சிவராமன், விஜய் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனு சிவராமன் கூறியதாவது: குக்கே சுப்பிரமணிய கோவில் ஊழிர்களின் சம்பளத்தை, 2018 முதல் ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி திருத்தி வழங்க வேண்டும் என்ற உத்தரவை, எட்டு வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்படும். எனவே, ஊழியர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவும்; அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ