அறிக்கை தராத அதிகாரிகள் லோக் ஆயுக்தா சம்மன்
பெங்களூரு:மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனை குளறுபடி தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சுகாதாரத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு, லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பியுள்ளது.பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி., ஜெனரல் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைப்பது இல்லை. நிர்ணயித்த நேரத்தில் டாக்டர்கள் பணிக்கு ஆஜராவது இல்லை. துாய்மை, சுகாதாரம் இல்லை என தொடர்ந்து புகார் வந்தது.இதை தீவிரமாக கருதிய, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, 2022 செப்டம்பர் 22ம் தேதி, அதிகாரிகளுடன் கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு செய்தார். வார்டுகளுக்கு சென்று நோயாளிகளின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பணியில் இல்லாதது, வருகை பதிவேடு புத்தகத்தில் கையெழுத்திடாதது, சில டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளிக்க, நோயாளிகளிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது.இது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கும், கமிஷனருக்கும் உப லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுவரை அறிக்கை அளிக்கவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி வீரப்பா, ஜூன் 26ம் தேதி நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என, சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கும், கமிஷனருக்கும் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினார்.'நேரில் ஆஜராகாமல் அலட்சியப்படுத்தினால், பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டி வரும்' எனவும் எச்சரித்துள்ளார்.