| ADDED : நவ 25, 2025 05:54 AM
விஜயநகர்: 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வளர்ப்பு மகன்' எனக் கூறி, காஷ்மீர் டாக்டரை ஏமாற்றி 2.70 கோடி ரூபாயை மோசடி செய்த, பெங்களூரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, விஜயநகரை சேர்ந்தவர் சுஜயேந்திரா, 40. இவருக்கும், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்வதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வளர்ப்பு மகன் என்றும் டாக்டரிடம் சுஜயேந்திரா கூறி உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார் அருகில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தையும், டாக்டரிடம் காண்பித்து நம்ப வைத்து இருக்கிறார். இந்நிலையில் சுஜயேந்திராவிடம், பெங்களூரு தேவனஹள்ளி அருகே ஆயுர்வேத மருத்துவமனையை திறக்க நினைத்து உள்ளதாகவும், இதற்கு தேவையான உதவிகளை செய்யும்படியும் டாக்டர் கேட்டுள்ளார். அரசிடம் பேசி உதவி செய்வதாக கூறிய சுஜயேந்திரா, டாக்டரிடம் இருந்து மருத்துவமனை பெயரில் 2.70 கோடி ரூபாய் வாங்கினார். ஆனால், மருத்துவமனை திறக்க எந்த உதவியும் செய்யவில்லை. இதுபற்றி பல முறை கேட்டும் சுஜயேந்திராவிடம் இருந்து பதில் வரவில்லை. அவர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த டாக்டர், கடந்த 20ம் தேதி விஜயநகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சுஜயேந்திராவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், மோசடி வழக்கில் இரண்டு முறை சுஜயேந்திரா சிறைக்கு சென்று வந்ததும், அவர் மீது நான்கு காசோலை மோசடி வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.