சிவகுமாரை கண்டித்து ம.ஜ.த., இன்று போராட்டம்
பெங்களூரு: அரசியல் சாசனத்தைத் திருத்தம் செய்வதாக கூறிய, துணை முதல்வர் சிவகுமாரை கண்டித்து, இன்று மாநிலம் முழுதும் போராட்டம் நடத்துவதாக ம.ஜ.த., அறிவித்துள்ளது.இதுகுறித்து, ம.ஜ.த., எஸ்.சி., பிரிவு தலைவர் அன்னதானி அளித்த பேட்டி:அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதாக கூறிய, துணை முதல்வர் சிவகுமார் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்அரசியல் சாசனம் குறித்து, இவர் கூறியதை கண்டித்து, இன்று காலை 10:00 மணிக்கு, மாநிலம் முழுதும் ம.ஜ.த., போராட்டம் நடத்தும்.உலகுக்கே முன் மாதிரியான அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறிய சிவகுமார், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தயாராக உள்ளது.இதற்கு அரசியல் சாசனம் இடையூறாக இருந்தால், அதில் மாற்றம் கொண்டு வருவதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மவுனமாக இருப்பது ஏன்?காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா அரசியல் சாசன பிரதியை கையில் பிடித்தபடி, பதவி பிரமாணம் செய்தனர்.ஆனால் இப்போது அரசியல் சாசனத்தை திருத்துவதாக, அவர்கள் கட்சி தலைவரே கூறியுள்ளார்.சிவகுமார் துணை முதல்வராக, அரசியல் சாசனமே காரணம். சுதந்திரம் கிடைத்த பின், 99 முறை அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரான பின் ஒரு முறை கூட அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யவில்லை.சிவகுமார் கூறியது வருத்தம் அளிக்கிறது. மாண்டியா மக்களை தந்திரக்காரர்கள் என, சிவகுமார் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது.பல தலைவர்களை மாநிலத்துக்கும், நாட்டுக்கும் வழங்கிய மாவட்ட மக்களை அவமதித்தது சரியல்ல. அவர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.