உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் முன்ஜாமின் மனு; மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி 

 எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் முன்ஜாமின் மனு; மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி 

பெங்களூரு: கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் முன்ஜாமின் மனுவை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற, பிக்லு சிவா கொலை வழக்கை, சி.ஐ.டி., விசாரிக்கிறது. இவ்வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். கைதிலிருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு, அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடியான நிலையில், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்திருந்தார். இந்த முன் ஜாமின் மனுவை நேற்று காலை நீதிபதி சிவகுமார் விசாரித்தார். அரசு வக்கீல் அசோ க் நாயக் வாதிடுகையில், ''இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 298ம் பக்கத்தில் குற்றவாளி 1, குற்றவாளி, 5 க்கு இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவு உள்ளது. பைரதி பசவராஜை கைது செய்து விசாரித்தால் தான், வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அதனால், மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது,'' என்றார். மனுதாரர் தரப்பு வக்கீல் சந்தேஷ் சவுதா வாதிடுகையில், ''இவ்வழக்கில் மனுதாரரை சிக்க வைக்க சதி நடக்கிறது. வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விசாரணைக்கு தயாராக இருப்பதாக மனுதாரர் பல முறை கூறியும், அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பவில்லை,'' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், மனு மீதான தீர்ப்பை நேற்று மாலைக்கு ஒத்திவைத்தார். மாலையில் தீர்ப்பு கூறும் போது, அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, பைரதி பசவராஜின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, எம்.எல்.ஏ., தரப்பு தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி