ஈ.டி., விசாரணைக்கு 14ல் ஆஜர் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி அறிவிப்பு
பெங்களூரு : ''வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக, அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், வரும் 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்,'' என, பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி தெரிவித்தார்.சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி. இவரது வீடு, அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.இதுகுறித்து பெங்களூரில் சுப்பாரெட்டி நேற்று அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலின்போது, நான் தாக்கல் செய்த வேட்புமனுவில், தவறான தகவல் அளித்திருப்பதாக என்னை எதிர்த்து போட்டியிட்ட சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த தகவலின் அடிப்படையில், என் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து கேள்வி கேட்டனர்.நான் வெளிநாடுகளுக்கு சென்றே 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த நாட்டிலும் முதலீடு செய்யவில்லை. அப்படியே நான் செய்து இருந்தாலும், என் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளலாம்.இதுபற்றி நானே கைப்பட எழுதித் தருகிறேன். வரும் 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன். என்னிடம் சொகுசு கார்கள் இருப்பது பற்றியும் கேட்டனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன்.ஆண்டிற்கு 130 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் கூட நான் வாங்கக் கூடாதா?என்னிடம் நிலம் விற்றதாக, வீரசாமி ரங்கசாமி என்பவர் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதுபற்றி என் கவனத்திற்கு வந்தது.பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் போலீசில், என் உதவியாளர் புகார் அளிக்க சென்றார்.ஆனால் போலி ஆவணம் தயாரித்த நபர் பற்றி, என்னிடம் எந்த தகவலும் இல்லாததால், புகாரை ஏற்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் கூறினர். சில அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக சதி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.