பால் விலை, மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
பெங்களூரு : கர்நாடகாவில் ஒரே நேரத்தில் பால் விலையையும், மின் கட்டணத்தையும் உயர்த்தியதை கண்டித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி, தன் 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, விலை உயர்வு, வரி உயர்வை மக்களின் மீது திணிக்கும் அரசு. இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கொள்ளை அடிக்கிறது. யுகாதி பண்டிகைக்கு, விலை உயர்வை பரிசு அளித்துள்ளது.மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மின் கட்டணத்தை, யூனிட்டுக்கு 36 பைசா உயர்த்தியுள்ளனர். ஒரு கையால் கொடுத்து, பத்து கைகளால் பறிக்கும் ராவண மனப்பான்மை கொண்ட அரசு.இது கிழக்கு இந்தியா காங்கிரஸ் கம்பெனி. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. கர்நாடகா, கிழக்கு இந்தியா காங்கிரஸ் கம்பெனியின் பிடியில் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசு வந்த பின், மூன்று முறை பால் விலையை உயர்த்தியுள்ளனர். பட்ஜெட்டில் எந்த வரிகளையும் விதிக்கவில்லை. இப்போது பால் விலை, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளை அடிக்க முற்பட்டுள்ளனர்.அரசு திவால் ஆகவில்லை என்றால், எதற்காக விலை உயர்த்த வேண்டும்?முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தது, பொய்யான பட்ஜெட். பட்ஜெட்டிலேயே வரிகளை அறிவித்திருக்கலாம். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பின், வரிகளை, விலைகளை உயர்த்துகிறார்.ஊடகங்களில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என, இது போன்று மோசடி செய்துள்ளனர். மோசடி செய்வதில் முதல்வர் சித்தராமையா, நம்பர் 1.மின்சாரம், பெட்ரோல் விலை உயர்ந்தால், அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். காங்கிரஸ் அரசு வழங்கும் 2,000 ரூபாய்க்காக, மக்கள் அவதிப்பட நேரிடுகிறது.வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டிக்கு காங்கிரஸ் தொண்டர்களை நியமித்து 150 கோடி ரூபாய் தண்ட செலவு செய்கின்றனர். ஒரு பக்கம் கட்சிக்காக, மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு பக்கம் மக்களுக்கு சுமையை ஏற்றிவைக்கிறது.யுகாதி பண்டிகை நேரத்தில், பால் விலை, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.