உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்சியினர் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் மக்கள்... எரிச்சல்! தினசரி வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுவதால் கோபம்

கட்சியினர் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் மக்கள்... எரிச்சல்! தினசரி வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுவதால் கோபம்

பெங்களூரு: தினமும் பொழுது விடிந்தால், அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டத்தை பார்க்க வேண்டியுள்ளதால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்; தினசரி வாழ்க்கை பாதிப்படைவதாக தவிக்கின்றனர்.கர்நாடக மக்கள் சமீப நாட்களாக விரக்தியுடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே, இதற்கு காரணம். தினமும் விடியும்போது, இன்று எந்த பொருளின் விலை உயருமோ என்ற பீதியுடன் கண் விழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன், அரசு பஸ் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து மெட்ரோ ரயில் கட்டணம்; அதன்பின் பால் விலை, மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.டீசல் மீதான விற்பனை வரி உயர்ந்தது. சில நாட்களுக்கு முன் தான் குடிநீர் கட்டணம் அதிகரித்தது.

அதிகரிக்கும் விலை

மற்றொரு பக்கம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. இதை காரணம் காண்பித்து, ஹோட்டல்களில் காபி, டீ, உணவு, சிற்றுண்டி விலையை அவற்றின் உரிமையாளர்கள் உயர்த்தினர்.காங்கிரஸ் அரசு வந்த பின், இலவச திட்டங்களால் மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பணம் மிச்சமாகிறது என, முதல்வர் சித்தராமையா உட்பட அமைச்சர்கள் பலரும் பெருமை பேசுகின்றனர்.ஆனால், இலவச திட்டங்களுக்கு நிதி திரட்ட, அத்தியாவசிய பொருட்களின் விலையை மாநில அரசு உயர்த்தி, மக்களை நெருக்கடியில் தள்ளுகிறது. இச்சூழ்நிலையில் எப்படி வாழ்க்கை நடத்துவது என தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.ஏழை, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு, விலைவாசி உயர்வு பெரும் தலைவலியாக உள்ளது. மற்றொரு பக்கம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன.பெண்கள், சிறுமியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.விலைவாசி உயர்வு, பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழல் ஆகிய காரணங்களால் ஏற்கனவே தவித்து வரும் மக்களை, அரசியல் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தினமும் போராட்டம் நடத்தி, அவர்களின் தினசரி வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

பா.ஜ., - ம.ஜ.த.,

விலைவாசி உயர்வு, ஊழல், அரசின் நிர்வாக தோல்வியை கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ., சில நாட்களுக்கு முன், பெங்களூரில் போராட்டம் நடத்தியது.கூட்டணி கட்சியான ம.ஜ.த., 'போதுமப்பா போதும், காங்., அரசு போதும்' என்ற கோஷத்துடன், பெங்களூரின் சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தியது.எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆளுங்கட்சி காங்கிரசும் போராட்டத்தில் குதித்தது. பெங்களூரின் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் முன், மாநில முதன்மை செயலர் மனோகர் தலைமையில், காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.இதில் ஒரு தலைவர், மத்திய அமைச்சர் குமாரசாமியின் முகக்கவசம் அணிந்து, கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார். அதன் மீது, 'என்னிடம் டன் கணக்கில் ஆவணங்கள் உள்ளன. ஆனால், அவற்றை கொண்டு வர வாகனம் இல்லை' என எழுதப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி ம.ஜ.த., அலுவலகத்துக்கு லாரி அனுப்பினர்.இரண்டு அரசியல் கட்சிகள் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தியதால், நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நடமாட முடியாமல் பரிதவித்தனர்.மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறி, மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.அரசியல் நோக்கத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் திட்டிக் கொள்ளவும், தங்களின் சக்தியை காட்டவும் போராட்டத்தை பயன்படுத்துகின்றனர். இதில் எந்த அர்த்தமும் இல்லை. போராட்டம் பெயரில் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் போதும் என, அதிருப்தியுடன் மக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி