விளையாட்டு அரங்கம் பாழானதால் வீரர்கள் அதிருப்தி
பல மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்கள் பற்றாக்குறை உள்ளது. சில இடங்களில் விசாலமான விளையாட்டு அரங்கங்கள் இருந்தாலும், சரியான பராமரிப்பின்றி சீர்குலைந்துள்ளன. இச்சூழ்நிலையில் தீபாவளி நேரத்தில் பட்டாசு கடை நடத்த அனுமதியளித்து, விளையாட்டு அரங்கங்களை பாழாக்கியதால், விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். சிக்கபல்லாபூர் நகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தீபாவளி பண்டிகை நேரத்தில், பட்டாசு கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. நான்கைந்து நாட்கள் பட்டாசு விற்ற கடைக்காரர்கள், விளையாட்டு அரங்கத்தை பாழாக்கிச் சென்றுள்ளனர். சேறும், சகதியும் தினமும் காலை, மாலையில் நுாற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட், ஹாக்கி, கபடி, கால்பந்து, கூடைப் பந்து, தடகளம் என, பல்வேறு பயிற்சிகள் செய்கின்றனர். பள்ளி சிறார்களும் மாலை நேரத்தில் விளையாட வருவதுண்டு. மூத்த குடிமக்கள் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். இத்தகைய விளையாட்டு அரங்கத்தில், பட்டாசு கடை நடத்த அனுமதி அளித்ததால், பாழாகியுள்ளது. அரங்கம் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. ஆங்காங்கே மது பாட்டில்கள் விழுந்து கிடக்கின்றன. பட்டாசு கழிவுகள் கிடக்கின்றன. பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், விளையாட்டு அரங்கத்தை சுத்தம் செய்யவில்லை. விளையாட்டு பயிற்சிக்கு வருவோர், இங்குள்ள சூழ்நிலையை பார்த்து, பயிற்சி செய்யாமலேயே திரும்புகின்றனர். கடந்தாண்டும் இதே சூழ்நிலை ஏற்பட்டது. ஊடகத்தினர் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்ட பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர, அவசரமாக விளையாட்டு அரங்கத்தை சுத்தம் செய்வித்தனர். நடப்பாண்டும் அதே போன்று இருப்பதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இடையூறுகள் அத்லெடிக்ஸ் அசோசியேஷன் இணை செயலர் மஞ்சினபலே சீனிவாஸ் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே, சிக்கபல்லாபூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பிரச்னைகள் உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லை. பல இடையூறுகளுக்கு இடையிலும், விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர். விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்கிறோம். விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில், விளையாட்டு அரங்கங்கள் முக்கிய பங்களிப்பு அளிக்கின்றன. இத்தகைய அரங்கங்களில் பட்டாசு கடைகள் நடத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது. பட்டாசு கடைகள் இருந்த இடம், சேறும், சகதியுமாக உள்ளது. விளையாட்டு அரங்கம் பழைய நிலைக்கு திரும்ப, சேறு, சகதியை அகற்ற வேண்டும். இனியாவது விளையாட்டுகளை தவிர, வேறு நோக்கங்களுக்கு விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்துவதை, தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -