பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைத்த வீடியோ வெளியான வழக்கில், 'வாட்ஸாப்' மூலம் யார், யாருக்கு வீடியோ அனுப்பப்பட்டது என்று கண்டறிய, 'மெட்டா' நிறுவனத்தின் உதவியை, பரப்பன அக்ரஹாரா போலீசார் நாடி உள்ளனர். தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கும், சம்மன் அனுப்ப போலீசார் தயாராகி வருகின்றனர். பயங்கரவாதி சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட சில கைதிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் மொபைல் பயன்படுத்தும் வீடியோ, கடந்த 7ம் தேதி வெளியானது. 8ம் தேதி வெளியான இன்னொரு வீடியோவில், சிறைக்குள் மது அருந்திவிட்டு, கைதிகள் ஆட்டம் போடும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து நான்கு வழக்குகள் பதிவாகின. சி.சி.பி., மற்றும் பரப்பன அக்ரஹாரா போலீசார் தலா, 2 வழக்குகளை விசாரிக்கின்றனர். விஜயலட்சுமி கைதிகள் சொகுசு வசதி வீடியோவை, நடிகர் தர்ஷன் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடா வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரிடம் சி.சி.பி., - பரப்பன அக்ரஹாரா போலீசார் இரண்டு முறை விசாரித்தனர். அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியபோது, சில வீடியோக்களை அழித்தது தெரிந்தது. இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜரானபோது, 'வக்கீல் ஒருவரிடம் இருந்து, கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைக்கும் வீடியோ எனக்கு வந்தது. அந்த வீடியோவை தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கு அனுப்பினேன்' என, போலீசாரிடம் தன்வீர் கவுடா கூறியதாக சொல்லப்படுகிறது. முழு தகவல்கள் இது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு, விசாரணை அதிகாரி கொண்டு சென்றார். 'தன்வீரிடம் இன்னொரு முறை விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து முழு தகவல்களையும் பெறுங்கள். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக விஜயலட்சுமிக்கும் சம்மன் அனுப்புங்கள்' என, உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால், விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்ப பரப்பன அக்ரஹாரா போலீசார் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைத்ததை, எந்த மொபைல் போனில் வீடியோ எடுக்கப்பட்டது; அந்த வீடியோ யார் மொபைலுக்கு முதலில் சென்றது; முதலில் சென்ற மொபைலில் இருந்து, வேறு எந்த மொபைலுக்கு அனுப்பப்பட்டது என்பதை கண்டறிய, 'மெட்டா' நிறுவனத்தின் உதவியை, பரப்பன அக்ரஹாரா போலீசார் நாடி உள்ளனர். தங்களுக்கு தேவையான தகவலை வழங்கும்படி கடிதமும் எழுதி உள்ளனர்.