உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போவி மேம்பாட்டு ஆணைய முறைகேடு கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்

போவி மேம்பாட்டு ஆணைய முறைகேடு கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்

பெங்களூரு : கர்நாடக போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேட்டில் தொடர்புள்ள பலரின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.'போவி' சமுதாயத்தினர் மேம்பாட்டுக்காக, மாநில அரசு கர்நாடக போவி மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. 2021 - 22ல், இந்த ஆணையத்தில் தொழிலதிபர்களுக்கு கடன் அளித்தபோது, முறைகேடுகள் நடந்துள்ளன.கடன் கொடுப்பதற்காக, பொது மக்களின் ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, பெங்களூரு, பெங்களூரு ரூரல், கலபுரகி ஆகிய மாவட்டங்களின் போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.இதையடுத்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. சி.ஐ.டி., விசாரணையில், இந்த ஆணையத்தில் 2018 முதல் 2023 வரை, 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.போவி மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குநர் லீலாவதி, பிரதான நிர்வாகி நாகராஜப்பா, முன்னாள் அதிகாரி சுப்பப்பா உட்பட, பலருக்கு முறைகேட்டில் தொடர்பிருப்பதை, சி.ஐ.டி., கண்டுபிடித்தது.இந்த கும்பல், தங்களின் அக்கம் பக்கத்தினர், வாடகைதாரர்கள், உறவினர்களின் பெயர்களில், போலியான கணக்குகளை துவக்கியது. இவர்களுக்கு கடன் கொடுத்ததாக, ஆவணங்கள் உருவாக்கி போவி மேம்பாட்டு ஆணையத்தின் கோடிக்கணக்கான ரூபாயை அந்த போலி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளது.அதன்பின் இந்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டு, தங்கள் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இதுபோன்று, 34.18 கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.இதுகுறித்து, அமலாக்கத்துறைக்கு சி.ஐ.டி., தகவல் தெரிவித்தது. இதையடுத்து அமலாக்கத்துறை களமிறங்கியது. முறைகேடு நடந்திருப்பதை விசாரணையில் அமலாக்கத்துறையும் உறுதி செய்ததால், வழக்கில் தொடர்புடைய பலரின் சொத்துக்களை முடக்கியுள்ளது.இதுகுறித்து, அமலாக்கத்துறை 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியதாவது:கர்நாடக போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, நாக ராஜப்பா, லீலாவதி உட்பட, வழக்கில் தொடர்புடையவர்களின் 26.27 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இந்த சொத்துகளின் இன்றைய விலை நிலவரப்படி கணக்கிட்டால், 40 கோடி ரூபாயாகும். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அந்த பதிவில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி