ஓராண்டாக கூலி பாக்கி சிறை கைதிகள் அதிருப்தி
பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஓராண்டாக கூலிப்பணம் வழங்காதது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு, சிறையில் அடைபட்டுள்ள கைதிகள், சிறையில் செய்யும் பணிகளுக்கு தினக்கூலி வழங்கப்படும். அதேபோன்று கர்நாடகாவின், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சமையல், துப்புரவு, கைவினை பொருட்கள், தோட்டப்பணி என, பல்வேறு வேலைகளை செய்கின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக 540 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த கூலித்தொகை, கைதிகளின் குடும்பத்தினருக்கு, மிகவும் உதவியாக உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டாக கைதிகளுக்கு கூலித்தொகை வழங்கப்படவில்லை. பெலகாவியின் ஹிண்டல்கா சிறையில், 837 கைதிகள் உள்ளனர். இவர்களில் 368 கைதிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் 68 கைதிகள் கூலி வேலை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓராண்டாக, கூலி வழங்கப்படவில்லை. 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை பாக்கியுள்ளது. இந்த தொகையை வழங்கும்படி, அரசுக்கு சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியும் பணம் வரவில்லை.ஷிவமொக்கா மாவட்ட மத்திய சிறையில், 750 கைதிகளில் 70 பேர் தினக்கூலி பெறுகின்றனர். இவர்களுக்கும் கூலித்தொகை கிடைக்கவில்லை. அதேபோன்று கலபுரகி, தார்வாட், விஜயபுரா, பல்லாரி, ராய்ச்சூர் என, பல்வேறு சிறைகளின் கைதிகளுக்கு கூலித்தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.கைதி ஒருவரின் தந்தை கூறுகையில், 'குற்ற வழக்கு ஒன்றில், என் மகன் கைதாகி ஹிண்டல்கா சிறையில் இருக்கிறார். அவர் செய்யும் பணிக்கு தினக்கூலி கிடைத்து வந்தது. 'இந்த தொகை குடும்பத்துக்கு, பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவியது. ஆனால் ஓராண்டாக பணம் வரவில்லை. குடும்ப நிர்வகிப்புக்கு பணம் இல்லாமல், மற்றவரிடம் கையேந்த வேண்டியுள்ளது' என்றார்.