தனியார் பஸ் கட்டணம் அடுத்த வாரம் உயர்வு?
பெங்களூரு: பல விலை உயர்வைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் தனியார் பஸ் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை, அரசு பஸ் கட்டணம், மெட்ரோ ரயில் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டதால், மக்கள் கொதிப்பில் உள்ளனர்.ஜனவரியில் அரசு பஸ் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியது. நான்கு போக்குவரத்துக் கழகங்களில் கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, 'தனியார் பஸ் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்று கர்நாடக மாநில தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக விவாதித்த போதும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.இதுதொடர்பாக, சங்க செயலர் குலடி சுரேஷ் நாயக் கூறியதாவது:ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. 1 லிட்டர் பெட்ரோல், ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துள்ளது. இனியும் தனியார் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றால், இத்துறையில் பெரும் நஷ்டம் ஏற்படும்.கர்நாடகாவில் 17 மாவட்டங்களில் 80,000க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அரசின் 'சக்தி' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால், பெண் பயணியர் எங்கள் பஸ்களில் ஏறுவதில்லை. இதனால் எங்களுக்கு ஏற்கனவே நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு பஸ்சையும் மாதந்தோறும் பராமரிக்க, 18,000 முதல் 20,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. டிக்கெட் கட்டணம் உயர்த்தவில்லை என்றால் பஸ் பராமரிப்பு, ஊழியர்கள் ஊதியம் என அனைத்தும் உரிமையாளருக்கு மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். எனவே, கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.டிக்கெட் கட்டணத்தை ஒரு ரூபாயில் இருந்து 3 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனாலும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அடுத்த வாரம் ஆலோசித்து கட்டண உயர்வு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.