| ADDED : நவ 23, 2025 04:05 AM
கதக்: ரோன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.பாட்டீலுக்கு, அமைச்சர் பதவி வழங்கக்கோரி, அவரது ஆதரவாளர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்று நம்பும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து உள்ளனர். தங்கள் ஆதரவாளர்களை சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தும்படி துாண்டிவிடுகின்றனர். இந்நிலையில் கதக் ரோன் தொகுதி எம்.எல்.ஏ., ஜி.எஸ்.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி, ரோன் டவுன் கலகலேஷ்வர் சதுக்கத்தில் நேற்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவாளர்களான சங்கப்பா தேஜி, ரவி அப்பிகேரி ஆகியோர், தங்கள் உடல் மீது பெட்ரோலை ஊற்றினர். தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் மீட்டு தண்ணீர் ஊற்றினர். தற்கொலைக்கு முயன்ற இருவரும் கூறுகையில், 'ஜி.எஸ்.பாட்டீல் நான்காவது முறையாக எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வருகிறார். மூத்த தலைவராக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். மீண்டும், மீண்டும் காங்கிரஸ் அவருக்கு அநீதி இழைக்கிறது. இம்முறை அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், எங்கள் உயிரை விட கூட தயாராக உள்ளோம்' என்றனர்.