தலைவர் பதவியில் விலக சிவகுமார் தயாராக உள்ளார்
ராம்நகர்: ''காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக சிவகுமார் தயாராக உள்ளார்,'' என்று, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறினார்.மாகடியில் அவர் அளித்த பேட்டி:கர்நாடக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து, கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். மேலிடம் கூறினால் பதவியை சிவகுமார் ராஜினாமா செய்வார். அவரும் தயாராக உள்ளார். பொருத்தமான நபரை கட்சி கண்டால் நாங்கள் வரவேற்போம். பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யா தற்கொலையை அரசியல் ஆக்குவது நல்லதல்ல. போலீஸ் விசாரணையில் உண்மை தெரியும். அதற்கு முன்பே எம்.எல்.ஏ.,க்கள் மீது குறை சொல்வது சரி இல்லை. அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களை பொறுத்து கொள்ள முடியாமல் ஜாதி, சாவு பெயரில் பா.ஜ., அரசியல் செய்கிறது. அரசுக்கு எதிராக போர் செய்வேன் என்று, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார். போருக்கு முன்பு பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் ஒன்று சேரட்டும். அந்த கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, குமாரசாமி பண்ணை வீட்டின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படுகிறது. இதில் அரசுக்கு தொடர்பு உள்ளது என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்கிரமித்து உள்ள நிலத்தை திரும்ப ஒப்படைத்தால், குமாரசாமிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.